முக்கிய சாலைகள், மேம்பாலங்கள் வெறிச்சோடின


முக்கிய சாலைகள், மேம்பாலங்கள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 9 Jan 2022 10:03 PM IST (Updated: 9 Jan 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி முக்கிய சாலைகள், மேம்பாலங்கள் வெறிச்சோடின. மேலும் தேவையின்றி வெளியே சுற்றியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

கோவை

கோவையில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி முக்கிய சாலைகள், மேம்பாலங்கள் வெறிச்சோடின. மேலும் தேவையின்றி வெளியே சுற்றியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இரவு நேர ஊரடங்கும், ஞாயிறுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், கோவையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இதையொட்டி கோவை திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, அவினாசி சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோன்று முக்கிய கடைவீதிகளான உக்கடம், ரங்கே கவுடர்வீதி, டவுன்ஹால், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

வெறிச்சோடிய சந்தைகள்

இதில் டவுன் ஹால், பெரியகடைவீதி, சாய்பாபா காலனி, சிங்காநல்லூர், காந்திபுரம், ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான ஜவுளி, நகை, செல்போன் உதிரிபாகம், எலெக்ட்ரிக்கல், இருசக்கர வாகன உதிரி பாகம் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இவை அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இந்த பகுதிகளில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. 

சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகள், மார்க்கெட்டுகள், காய்கறி கடைகள் வெறிச்சோடி கிடந்தது. பொது போக்குவரத்தும் தடை செய்யப்பட்டதால், எப்போதும் பரபரப்பாக இருக்கும் காந்திபுரம் பஸ் நிலையங்கள் காலியாக கிடந்தன. அத்தியாவசிய தேவையான மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் மட்டும் திறந்திருந்தன. ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டுமே நடந்தது. பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டு இருந்தது.

அபராதம்

முழு ஊரடங்கை மீறி யாராவது தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிகிறார்களா? என்பதை கோவை நகரில் 700 போலீசார் உள்பட மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காந்திபுரம் பகுதியில் மேம்பாலங்கள் திறந்திருந்தன. அதே சமயம் 100 அடி சாலையில் உள்ள கோவையின் மிக உயரமான 75 அடி உயர மேம்பாலத்திற்கு மட்டும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு இருந்தன. அங்கு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

கோவை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அவர்களை செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்து செல்ல ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பெரும்பாலும் மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் பார்ப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது என பொழுதை கழித்தனர்.


Next Story