வேலை பார்த்த நிறுவனத்தில் ரூ.48 லட்சம் மோசடி செய்த வாலிபர் உடந்தையாக இருந்த மனைவியுடன் கைதானார்


வேலை பார்த்த நிறுவனத்தில் ரூ.48 லட்சம் மோசடி செய்த வாலிபர் உடந்தையாக இருந்த மனைவியுடன் கைதானார்
x
தினத்தந்தி 10 Jan 2022 12:23 AM GMT (Updated: 2022-01-10T05:53:48+05:30)

வேலை பார்த்த நிறுவனத்தில் ரூ.48 லட்சம் மோசடி செய்த வாலிபர், அதற்கு உடந்தையாக இருந்த தனது மனைவியுடன் கைதானார்.

திருவொற்றியூர்,

சென்னை தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பருப்பு கம்பெனி மேலாளர் ராஜகணேஷ், புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், தங்கள் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்த தீபன்ராஜ் (வயது 32), ரூ.47 லட்சத்து 80 ஆயிரத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறி இருந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர்கள் பீர்பாஷா, புவனேஷ்வரி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து தீபன்ராஜை தேடி வந்தனர்.

மனைவியுடன் கைது

இந்தநிலையில் பாரிமுனை சென்னை கடற்கரை ெரயில் நிலையம் அருகே ராஜாஜி சாலையில் தீபன்ராஜ் தனது மனைவியுடன் காரில் சென்றபோது தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து, போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அப்போது தீபன்ராஜ், பணம் கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டார். தீபன்ராஜ் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவருடைய மனைவி யுவராணி (32) இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆன்லைன் சூதாட்டம்

தீபன்ராஜ், தான் மோசடி செய்த பணம் அனைத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துவிட்டதாக கூறினார். அவர் பணம் கையாடல் செய்தது குறித்து தனியார் நிறுவனம் சார்பில் போலீசில் புகார் அளித்ததும் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதிக்கு சென்று அங்குள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார்.

பின்னர் சென்னை வந்த தீபன்ராஜ், தனது மனைவியையும் விருதுநகர் அழைத்துச்செல்ல காரில் சென்றபோது போலீசாரிடம் சிக்கியது தெரிந்தது.

Next Story