பொது ஊரடங்கு: செங்கல்பட்டு மாவட்ட சாலைகள் வெறிச்சோடின

பொது ஊரடங்கு காரணமாக செங்கல்பட்டு மாவட்ட சாலைகள் வெறிச்சோடி காணப் பட்டன.
பொது ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ஒமைக்ரான் தொற்றும் பரவி வருகிறது. கொரோனா தொற்று வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது ஊரடங்கு நடைமுறைபடுத்தப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் காரணமாக நேற்று பொது ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அத்தியாவசிய கடைகளான மருந்தகம், பால் கடை போன்றவை திறக்கப்பட்டு இருந்தன.
சாலைகள் வெறிச்சோடின
இதன் காரணமாக சென்னை-திருச்சி, மற்றும் திருச்சி-சென்னை ஜி.எஸ்.டி. சாலை, வண்டலூர் வெளிவட்ட சாலை, வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை, கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலை உள்பட அனைத்து முக்கிய சாலைகளும் வாகனங்கள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
முக்கிய ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பு இடங்களில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பொது ஊரடங்கை மீறிய ஒரு சில பொதுமக்கள் சாலைகளில் வாகனங்களில் சென்றவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
பரனூர் சுங்கச்சாவடி
எப்போதும் பரபரப்பாக காணப்படும் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி சாலைகள் வாகனங்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன. பொதுபோக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் செங்கல்பட்டு புதிய, பழைய பஸ் நிலையங்கள் வெறிச்சோடின. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறைந்த அளவிலேயே வாகனங்கள் சென்றன.
செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்ட எல்லைகளில் 7 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வெளியில் சுற்றுபவர்களை கண்காணிக்க 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மாமல்லபுரம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று அனைத்து கடைகளும் மூடப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல் வெண்ணை உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்கள் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வரத்தின்றி காணப்பட்டது. 500-க்கும் மேல் சிற்பக்கலை கூடங்களுடன் மூடப்பட்டிருந்தது. ஊரடங்கால் நடைபாதை வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள், ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
போலீசார் ஆங்காங்கு ரோந்து சென்றதால் பொதுமக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். மாமல்லபுரம் புறவழிச்சாலையில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி உள்ளிட்ட போலீசார் அடங்கிய குழுவினர் வாகன தணிக்கை நடத்தினர். அப்போது இரு சக்கர வாகனத்தில் ஊர் சுற்றிய நபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
வாகன சோதனை
கொரோனா தொற்று, ஒமைக்ரான் பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று தழிழக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருந்தது. இதன் காரணமாக நேற்று பழைய மாமல்லபுரம் சாலை வெறிச்சோடி காணப்பட்டது. சோழிங்கநல்லூர் பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி சோதனைச்சாவடி, துரைப்பாக்கம் என பல இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவை இல்லாமல் சுற்றி திரிந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உணவகங்கள், வணிக வளாகங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story






