சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
வாலிபரை தாக்கியவர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய வலியுறுத்தி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டதால், பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
வாலிபரை தாக்கியவர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய வலியுறுத்தி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டதால், பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாலிபர் மீது தாக்குதல்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள மக்கள் சக்தி நகரை சேர்ந்தவர் ஹரிகர சுதாகர்(வயது 21). இவர், அதே பகுதியில் உள்ள மேஜர் ராமசாமி என்பவரது வீட்டில் வேலை பார்க்கும் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.
அந்த இளம்பெண்ணை பார்க்க சென்ற ஹரிகர சுதாகரை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் ஆனைமலை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மேஜர் ராமசாமி, காளிமுத்து உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இதேபோன்று காளிமுத்து கொடுத்த புகாரின்பேரில் ஹரிகர சுதாகர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
முற்றுகை போராட்டம்
இந்த நிலையில் பொள்ளாச்சி அனைத்து சமூக இயக்கத்தினர் சார்பில் மேஜர் ராமசாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், சமீபத்தில் டாப்சிலிப் அருகே பழங்குடியின சிறுமியை சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் உண்மை தன்மையை கண்டறியும் குழுவை வனப்பகுதிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் அவர்கள், நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதையடுத்து அவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வால்பாறை துணை சூப்பிரண்டு நேரில் வந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர். பின்னர் வால்பாறை துணை சூப்பிரண்டு சீனிவாசன் வந்ததும், சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சப்-கலெக்டரிடம், அனைத்து சமூக இயக்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ஆனைமலையில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த ஹரிகர சுதாகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக மேஜர் ராமசாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும். மேலும் அவரை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் உண்மையை கண்டறிய வக்கீல்கள் கொண்ட குழுவை வனப்பகுதிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
போலீசார் எச்சரிக்கை
அப்போது, உரிய விசாரணை நடத்திய பிறகே வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று சப்-கலெக்டர் தெரிவித்தார். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் மீண்டும் நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். உடனே போராட்டத்தை கைவிடாவிட்டால் கைது செய்வோம் என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரித்தனர். இதனால் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதற்கிடையில் சப்-கலெக்டர் அங்கிருந்து காரில் வெளியே புறப்பட்டார். ஆனால் வழிவிடாமல் போராட்டக்காரர்கள் தரையில் அமர்ந்தனர். உடனே சப்-கலெக்டர் கீழே இறங்கி வந்து வழிவிடுமாறு கூறினார். பின்னர் போராட்டக்காரர்கள் எழுந்து ஓரமாக நின்றனர். தொடர்ந்து அவர் காரில் புறப்பட்டபோது, இருபுறமும் நின்று கோஷம் எழுப்பினர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story