ரெயிலில் 30 லட்சம் பறிமுதல்


ரெயிலில் 30 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Jan 2022 8:27 PM IST (Updated: 10 Jan 2022 8:27 PM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் 30 லட்சம் பறிமுதல்


கோவை

கோவை வந்த ரெயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நகைக்கடை ஊழியரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போலீசார் சோதனை 

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று புறப்பட்டது. 

அந்த ரெயில் நேற்று முன்தினம் காலை திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தது. 

அப்போது ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.) போலீசார், அந்த ரெயிலில் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர். 

இதில் பி-2 பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக அமர்ந்திருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

நகைக் கடை ஊழியர்

அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அந்த வாலிபர் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்ட போது ரூ.30 லட்சம் பணம் இருந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. 

இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை அதே ரெயிலில் ஆர்.பி.எப். போலீசார் கோவைக்கு அழைத்து வந்து ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லால் சிங் ராவ் (வயது 19) என்பதும், 

வேலூரில் உள்ள ஒரு நகைக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருவதும், தங்கம் வாங்குவதற்காக ரூ.30 லட்சத்துடன் கோவைக்கு வந்ததும் தெரிந்தது. 

விசாரணை

ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் லால்சிங்ராவிடம் இருந்த ரூ.30 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து அவர், ரேஸ்கோர்சில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். 

உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.30 லட்சம் கொண்டு வந்ததால் அது ஹவாலா பணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் லால் சிங் ராவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ஆர்.பி.எப். போலீசார் கூறும்போது, ரெயிலில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் ஆர்.பி.எப். போலீஸ் சிறப்பு தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். 

அப் போது ரூ.30 லட்சத்துடன் இருந்த லால் சிங் ராவ் சிக்கினார். அவரை, கோவை ரெயில்வே போலீசார் விசாரித்த பிறகு வருமான வரி துறையினரிடம் ஒப்படைத்தனர் என்றனர்.

Next Story