பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்


பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 10 Jan 2022 8:34 PM IST (Updated: 10 Jan 2022 8:34 PM IST)
t-max-icont-min-icon

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கும் கொரனோ தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் தடுப்பூசியை உறுதிபடுத்தும் வகையில் குறிப்பாக முன்களப்பணியாளர்களுக்கு தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள மேலும் ஒரு தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ கழகம் அறிவுறுத்தியள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் பூஸ்டர் தடுப்பூசி முன்கள மற்றும் சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் இந்த பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

5,898 பேர்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள முன்கள, சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் என மொத்தம் 5,898 பேர் உள்ளனர். 2-வது தவணை தடுப்பூசி செலுத்திய மேற்கண்ட பயனாளிகள் 39 வாரங்களுக்கு பிறகு இந்த பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா என்ற கொடிய நோயை ஒழிப்பதற்கான மிக பெரிய ஆயுதம் தடுப்பூசியே ஆகும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் இந்த பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசியை பரிந்துரைக்கப்பட்ட பயனாளிகள் செலுத்தி பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story