படப்பை அருகே ரூ.9 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு


படப்பை அருகே ரூ.9 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
x

படப்பை அருகே ரூ.9 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆக்கிரமிப்பு

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் அடையாறு ஆற்றின் பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து ஆஞ்சநேயர் கோவிலை கட்டியிருந்தனர்.

நீதிமன்ற உத்தரவின் படி இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வருவாய்த் துறை சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குன்றத்தூர் தாசில்தார் பிரியா, பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் பிரபு ஆகியோர் தலைமையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி ஆக்கிரமிப்பு கட்டிடம் மற்றும் கோவிலை பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர்.

எதிர்ப்பு

அப்போது பா.ஜ.க. மற்றும் விசுவ இந்து பரிஷத் இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் தாசில்தாரிடம் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கோவிலை இடிக்காமல் வருவாய்த்துறையினர் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ.சைலேந்திரன், தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரபு, குன்றத்தூர் தாசில்தார் ப்ரியா, துணை தாசில்தார் பாலசந்தர், தாட்சாயணி ஆகியோர் முன்னிலையில் கோவிலை இடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

8 பேர் கைது

அப்போது 10-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 ஆண்கள் 4 பெண்கள் என 8 பேரை மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் கைது செய்து அங்குள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து கோவிலை முழுமையாக இடித்து அகற்றினர். இதே பகுதியில் உள்ள தேவாலயத்தின் சுற்றுச்சுவர் நீர்நிலை இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருந்ததால் சுவரை இடித்து அகற்றினர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியின் மதிப்பு சுமார் ரூ.9 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story