விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்


விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்
x
தினத்தந்தி 11 Jan 2022 7:38 PM IST (Updated: 11 Jan 2022 7:38 PM IST)
t-max-icont-min-icon

தினமும் ரூ.50 கோடி துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்துறையினர் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

சுல்தான்பேட்டை

தினமும் ரூ.50 கோடி துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்துறையினர் கோரிக்கை விடுத்து உள்ளார்கள். 

வேலை நிறுத்தம்

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறி உரிமையாளர்களுக்கு, ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த 2014-ம் ஆண்டு முதல் கூலி உயர்வு வழங்கவில்லை. இந்தநிலையில், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியபின் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் சமீபத்தில் இறுதி செய்யப்பட்டது. அதன்படி சோமனூர் ரகங்களுக்கு 23 சதவீதம் மற்ற இதர ரகங்களுக்கு 20 சதவீதம் கூலி உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், கூலி உயர்வு அமல்படுத்தாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் இழுத்தடித்து வந்ததால் கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 9-ந்தேதி முதல் தங்கள் தறிகளை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

ரூ.50 கோடி இழப்பு 

இதனால், தினமும் ரூ.50 கோடி துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் மட்டும் தினமும் ரூ.1.50 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பல கோடி மதிப்பில் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. 
வேலை நிறுத்தம் காரணமாக சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள தறிக்குடோன்களில் வேலை பார்த்து வந்த தர்மபுரி, திருவண்ணாமலை, மணப்பாறை, விருதுநகர் உள்ளிட்ட வெளிமாவட்டச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் பெருமளவு தொழிலாளர்கள் போராட்டம் நிறைவுபெற்ற பின் மீண்டும் வேலைக்கு திரும்பலாம் என தங்களின் சொந்தஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர். வேலைநிறுத்தப்போராட்டம் வரும் 20-ந்தேதி வரை நீடிக்கும் என கூறப்படுகிறது. 

முடிவுக்கு கொண்டுவர வேண்டும்

விசைத்தறியாளர்கள், தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மீண்டும் இருதரப்பினரை அழைத்து பேசி உடனடியாக தீர்வு காண தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வேலை இழந்துள்ள தொழிலாளர்களில் பலர் தற்காலிகமாக வெள்ளை அடித்தல், காய்கறி அறுவடை செய்தல், கட்டுமானம் செய்தல் போன்ற கிடைக்கும் வேலைகளில் ஈடுபட்டு தங்களின் அன்றாட செலவுகளை சமாளித்து வருகின்றனர்.
--------------
சுல்தான்பேட்டையில் செயல்படாமல் கிடக்கும் விசைத்தறிகளை படத்தில் காணலாம்.

Next Story