சப் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதி
வால்பாறையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரேனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலையத்திற்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டதோடு, அவரின் அறை மட்டும் மூடப்பட்டது.
வால்பாறை
வால்பாறையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரேனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலையத்திற்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டதோடு, அவரின் அறை மட்டும் மூடப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதை முன்னிட்டு சுகாதார துறையின் உத்தரவின்பேரில் வால்பாறை அரசு கல்லூரியில் தற்காலிகமாக மூடப்பட்ட கொரோனா சிகிச்சை மையம் மீண்டும் திறப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி அங்கு 50 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் வால்பாறை அருகில் உள்ள காடம்பாறை போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதனையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். நேற்று பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கிருமி நாசினிகள் தெளிப்பு
இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டதோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும், காடம்பாறை போலீஸ் நிலையத்திற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா தொற்று தடுப்பு கிருமி நாசினிகள் தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தொற்று உறுதியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பயன்படுத்திய அறையை மட்டும் பூட்டி அன்றாட பணிகள் வேறு அறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காடம்பாறை போலீஸ் நிலையத்தில் அவருடன் பணியாற்றியவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு ஏதேனும் அறிகுறிகள் இருப்பதாக தெரிந்தால் உடனே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வால்பாறை இன்ஸ்பெக்டர் கற்பகம் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு அறிவிப்புகள்
வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமும் மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்கள் மூலமும் சுகாதார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வால்பாறை நகரில் உள்ளவர்களும் எஸ்டேட் பகுதி மக்களும் கொரோனா தடுப்பு அறிவிப்புகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பிலும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story