தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
சாலை ஆக்கிரமிப்பு
கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் இருந்து கன்னேரிமுக்கு கிராமத்திற்கு செல்லும் சாலையில் புதர்செடிகள் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. எனவே இவ் வழியாக செல்லும் வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு இந்த சாலையில் உள்ள புதர்களை வெட்டி அகற்ற வேண்டும்.
சிவகுமார், ஜக்கலோடை.
போக்குவரத்து நெரிசல்
சுல்தான்பேட்டை அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தில் நால்ரோடு சந்திப்பு உள்ளது. இங்கு, காலை, மாலை அதிகம் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆனால், இங்கு முக்கிய நேரங்களில் போக்குவரத்தை சீரமைக்க போலீசார் இல்லாததால் அடிக்கடி சிறு விபத்து, இடையூறு ஏற்படுகிறது. இதனை தடுக்க நால்ரோட்டில் போலீசாரை பணியில் நியமிக்க வேண்டும்.
பால்ராஜ், சுல்தான்பேட்டை.
குடிமகன்களின் தொந்தரவு
கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு குடித்துவிட்டு வரும் மர்ம ஆசாமிகள் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளிடம் தகராறு செய்து வருகிறார்கள். இது குறித்து தட்டிக்கேட்டால் அவர்களை தரக்குறைவாக திட்டியும் வருகிறார்கள். இதனால் இங்கு பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவராமன், கோவை.
விபத்தை ஏற்படுத்தும் சாலை
கோவை உக்கடத்தில் இருந்து பேரூர் புறவழிச்சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இங்கு செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
சந்திரபோஸ், உக்கடம்.
செயல்படாத சிக்னல்
கோவையை அடுத்த பாலத்துறை எல் அண்டு டி பைபாஸ் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. கலெக்டரிடம் கொடுத்த புகாரை தொடர்ந்து அங்கு சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த சிக்னலில் நேரம் பொருத்தாததால் அவை இயங்கவில்லை. இதனால் மீண்டும் விபத்து ஏற்படும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து நேரததை பொருத்தி அந்த சிக்னல் செயல்பட வழிவகை செய்ய வேண்டும்.
சோபன், மதுக்கரை.
நிழற்குடை ஆக்கிரமிப்பு
கோவை சத்தி ரோட்டில் உள்ள குரும்பபாளையம் அருகே சாலை ஓரத்தில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு செடிகள் ஆக்கிரமித்து உள்ளது. எனவே அதை யாரும் பயன்படுத்தாமல் வீணாக கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த நிழற்குடையை ஆக்கிரமித்து உள்ள புதர்களை அகற்ற வேண்டும்.
பழனிகுமார், கோவில்பாளையம்.
ஒளிராத மின்விளக்குகள்
கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் ஏராளமான மின்விளக்குகள் போடப்பட்டு உள்ளன. இரவு நேரத்தில் அந்த விளக்குகள் முறையாக ஒளிருவது இல்லை. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். சில நேரத்தில் விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும்.
சந்தானம், கோவை.
குண்டும் குழியுமான சாலை
கோவை செல்வபுரம் ரங்கசாமி காலனி பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயத்துடன் தப்பிச்செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
கார்த்திக், செல்வபுரம்.
ஆபத்தான குழி
கோவை பாலசுந்தரம் ரோட்டில் போலீஸ் பயிற்சி பள்ளி நுழைவு வாயிலில் எதிரே சாலையில் குழி உள்ளது. அந்த குழி சரிசெய்யப்படாமல் இருப்பதால் அந்த வழியாக செல்பவர்கள் அதற்குள் விழுந்து விபத்து ஏற்படும் நிலை நீடித்து வருகிறது. அத்துடன் அந்த குழியில் குடிநீர் உடைப்பு ஏற்பட்டு வீணாக வெளியேறுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த ஆபத்தான குழியை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
சந்தோஷ், கோவை.
நேர கட்டுப்பாடு தேவை
பொள்ளாச்சி நகரில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. ஆனால் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதை தடுக்க கிழக்கு புறவழிச்சாலையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாகனங்களில் பொள்ளாச்சிக்குள் வருவதற்கு கொண்டு வரப்பட்ட நேர கட்டுப்பாட்டை செயல்படுத்த வேண்டும்.
அருண்குமார், பொள்ளாச்சி.
Related Tags :
Next Story