திருத்தணி, கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் இல்லாத பயணிகளுக்கு டிக்கெட் வழங்க மறுப்பு
திருத்தணி ரெயில் நிலையத்தில் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழுடன் வராத பயணிகளுக்கு டிக்கெட் வழங்க ரெயில்வே ஊழியர்கள் மறுத்து விட்டனர்.
புதிய கட்டுப்பாடுகள்
சென்னை புறநகர் ரெயிலில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கான தடுப்பூசி சான்றிதழை பயணிகள் கைகளில் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
அதன்படி நேற்று திருத்தணி ரெயில் நிலையத்தில் பயணிகள், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை ரெயில் நிலைய கவுண்ட்டரில் காட்டி டிக்கெட் வாங்கி பயணம் செய்தனர்.
டிக்கெட் வழங்க மறுப்பு
அப்போது, திருத்தணி ரெயில் நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களும், ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட பலர் டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் வாங்க வந்தனர். அவர்களுக்கு டிக்கெட் வழங்க ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.
இதனால் ரெயில் நிலைய பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. ரெயில்வே போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இனிமேல் ரெயிலில் பயணம் செய்ய 2 தவணை தடுப்பூசி சான்றிதழ்களுடன் வந்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்று திருத்தணி ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
கும்மிடிப்பூண்டி
அதேபோல் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்டிரல் புறநகர் ரெயில் மார்க்கத்தில் பயணித்த பயணிகள் தங்களது தடுப்பூசி செலுத்திதற்கான விவரங்களை காண்பித்த பிறகே டிக்கெட் எடுக்க டிக்கெட் கவுண்டர் வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு தவணை தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டர் வளாகத்தில் அனுமதிக்கப்படாத சூழலில் அவர்கள் மாற்று ஏற்பாடாக பஸ்களில் பயணம் செய்தனர்.
Related Tags :
Next Story