நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்


நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 12 Jan 2022 5:17 PM GMT (Updated: 12 Jan 2022 5:17 PM GMT)

பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

பொள்ளாச்சி

பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகம் அருகில் 2 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் ஒரு ரேஷன் கடையில் சரியான திட்டமிடல் இல்லாமல் கடைக்கு முன்பு அனைத்து பொருட்களையும் வைத்து, பொதுமக்கள் வந்ததும் ஒவ்வொரு பொருளாக எடுத்து பேக்கிங் செய்து வினியோகம் செய்தனர். இதனால் காலதாமதம் ஆனதால் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

வெயிலில் காத்திருந்தனர்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பொங்கல் பரிசு பொருட்கள் கொண்ட தொகுப்பு வராததால் கடந்த வாரம் பெரும்பாலான ரேஷன் கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து மீண்டும் பொருட்கள் வந்த பிறகு கடந்த 10-ந்தேதி முதல் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஜோதி நகர் நுகர்பொருள் வாணிப கழகம் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் 32, 34 மற்றும் 35-வது வார்டு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

இதில் ஒரு கடையில் பொருட்களை முன்கூட்டியே பேக்கிங் செய்யாமல், பொதுமக்களை வரவழைத்து அதன்பிறகு பேக்கிங் செய்து வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பெண்கள், முதியவர்கள் பரிசு பொருட்களை வாங்குவதற்கு வெயிலில் வரிசையில் காத்திருந்தனர். 

பேக்கிங் செய்ய தாமதம்

மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நெருக்காக நின்றதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. பெரும்பாலானோர் முகக்கவசமும் அணியவில்லை. இதை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. எனவே தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதிகாரிகள் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கி கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். 

மேலும் பொருட்களை முன்கூட்டியே பேக்கிங் செய்து வினியோகம் செய்தால் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. இதுபோன்ற முன்னேற்பாடுகளை கடைபிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், கடையில் போதிய இடவசதி இல்லாததால் வெளியே வைத்து பேக்கிங் செய்து வழங்கப்படுகிறது. காலதாமதமின்றி பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது என்றனர்.


Next Story