தோப்புகளில் தேங்கி கிடக்கும் தேங்காய்கள்


தோப்புகளில் தேங்கி கிடக்கும் தேங்காய்கள்
x
தினத்தந்தி 12 Jan 2022 10:47 PM IST (Updated: 12 Jan 2022 10:47 PM IST)
t-max-icont-min-icon

விலை வீழ்ச்சியால் தோப்புகளில் தேங்காய்கள் தேங்கி கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

நெகமம்

விலை வீழ்ச்சியால் தோப்புகளில் தேங்காய்கள் தேங்கி கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

தென்னை விவசாயம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, நெகமம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது. இங்கு தேங்காய், இளநீர், கொப்பரை உற்பத்தி மட்டுமல்லாமல் மட்டையில் இருந்து நார் உற்பத்தி, கழிவு மஞ்சில் இருந்து ‘பித்' கட்டிகள் உற்பத்தியை விவசாயிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தேங்காய் ரூ.15-க்கு விற்பனை ஆனது. இதனால் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவியதுபோதும், விவசாயிகள் ஓரளவு சமாளித்து வந்தனர். அதன்பின்னர் திடீரென்று விலை வீழ்ச்சி அடைந்து, ஒரு தேங்காய் ரூ.12-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் தென்னை விவசாயிகள்  கவலை அடைந்து உள்ளனர்.

தேங்காய்கள் தேக்கம்

இதன் காரணமாக நெகமம், கிணத்துக்கடவு, செஞ்சேரிமலை, சுல்தான்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் சுமார் 30 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை தேங்காய்கள் உரிக்காமல் அப்படியே தேக்கம் அடைந்து உள்ளன.

இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது:-பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில் அதிகளவில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறை, விளைநிலங்கள் வீடுகளாக மாறி வரும் நிலையில் தென்னை சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பாமாயில் இறக்குமதி 

தேங்காய் விலை உயரும் என்ற எதிர்பார்ப்புடன் தோப்புகளிலேயே உரிக்காமல் அப்படியே தேங்காய்களை மலைபோல் குவித்து வைக்கும் நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான தேங்காய்கள் அழுகும் நிலை காணப்படுகிறது. 

இதற்கு காரணம், வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்து வருவதுதான். தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பாமாயிலை பயன்படுத்தி வருவதால், தற்போது சந்தையில் தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை. தேங்காய்க்கு உரிய விலை கிடைத்தால்தான் தென்னை விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story