மாணவர்கள் பிணமாக மீட்பு


மாணவர்கள் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 10:27 AM GMT (Updated: 13 Jan 2022 10:27 AM GMT)

மாணவர்கள் பிணமாக மீட்பு

பொங்கலூர் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்கும்போது அடித்து செல்லப்பட்ட 2 மாணவர்கள் வெள்ளகோவில் அருகே பிணமாக மீட்கப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
மாணவர்கள்
திருப்பூர் ஆர்.கே.கார்டன் பகுதியை சேர்ந்த டார்ஜன் மகன் சரண் சஞ்சய் வயது 16. திருப்பூர் காங்கேயம் ரோடு, குருநாதாகவுண்டர் வீதி பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் மகன் பரணிதரன் 15. இவர்கள்  2 பேரும்  திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தனர். சம்பவத்தன்று மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள்  2 பேரும் வீட்டிற்கு செல்லாமல் தனது நண்பர்களுடன் ஆண்டிப்பாளையம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர். அங்கு வாய்க்கால் கரையோரம் புத்தகப்பையை 2 பேரும் வைத்து விட்டு நண்பர்களுடன்  குளித்துக்கொண்டிருந்தனர். 
தற்போது திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் வாய்க்காலில் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த தண்ணீரில் மாணவர்கள் இருவரும் இழுத்துச்செல்லப்பட்டனர். இதை அறிந்த மற்ற நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதற்குள் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.  
தீயணைப்பு துறையினர்
இதுகுறித்து அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்திற்கும், திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களை தேடி பார்த்தனர். ஆனாலும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
 இந்த நிலையில் நேற்று காலை வெள்ளகோவில் அருகே உள்ள வெள்ளமடை அருகே பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் 2 சிறுவர்கள் பிணம் கிடப்பதாக வெள்ளகோவில் மற்றும் அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  உடனே போலீசார் விரைந்து வந்து  சிறுவர்களின் பிணத்தை மீட்டு விசாரித்தனர். விசாரணையில் சிறுவர்கள்   2 பேரும்  ஆண்டிப்பாளையம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்கும்போது இழுத்து செல்லப்பட்ட மாணவர்களான சரண்சஞ்சய், பரணிதரன் என தெரியவந்தது. இதையடுத்து மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்துவந்து மாணவர்களின் உடலை  பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. பின்னர் மாணவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக காங்கேயம்  அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து  அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 
----

Next Story