உத்தர வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு


உத்தர வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 12:03 PM GMT (Updated: 13 Jan 2022 12:03 PM GMT)

உத்தர வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

தாராபுரம் கோட்டைமேடு உத்தர வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல்  திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உத்தர வீரராக பெருமாள் கோவில்
தாராபுரம் கோட்டை மேட்டில் பிரசித்தி பெற்றஉத்தர வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு மோகினி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்சவர் சிலைக்கு திருமஞ்சனம் நடந்தது. இதில் பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத உத்தர வீரராகவ பெருமாளுக்கு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பின்னர் சப்பரத்தில் எழுந்தருளிய பெருமாள் பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
சாமி  தரிசனம்
அதைத்தொடர்ந்து காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தாராபுரம், குண்டடம், மூலனூர்,  அலங்கியம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணிகளில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.


Next Story