மாவட்ட செய்திகள்

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு + "||" + Heavens Gate Opening at Perumal Temples

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பொள்ளாச்சி

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசியையொட்டி பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி வரதராஜ பெருமாள் நேற்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக பக்தர்கள் வழங்கிய காய்கறிகள் மற்றும் தொழில்சார்ந்த பொருட்கள் சொர்க்க வாசலில் கட்டப்பட்டு இருந்தது. டி.கோட்டாம்பட்டி கோதண்டராமர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 

இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பிருந்தாவனத்தில் கிருஷ்ணருக்கு, ராதை வெண்ணெய் தரும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ரங்கநாதபெருமாள் கோவில்

ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.50 மணிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் 18 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. ஜமீன்ஊத்துக்குளி உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். 

‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷம்

நெகமம் அருகே செட்டியக்காபாளையத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 13-ந் தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேஷ வாகனத்தில் பெருமாள் உள்பிரகாரத்தில் வலம் வந்தார். பின்னர் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக உலா சென்றார். அதிகாலை 5.45 மணியளவில் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. 

அதன் வழியே பெருமாள் வெளியே வந்தார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என்று பக்தர்கள் பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர். மேலும் ஏற்கனவே சொர்க்க வாசலுக்கு வெளியே வீற்றிருந்த நம்மாழ்வார், ராமானுஜர், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கும் பெருமாள் காட்சி தந்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதேபோன்று பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.