வெறிச்சோடிய குரங்கு நீர்வீழ்ச்சி


வெறிச்சோடிய குரங்கு நீர்வீழ்ச்சி
x
தினத்தந்தி 15 Jan 2022 3:12 PM GMT (Updated: 15 Jan 2022 3:12 PM GMT)

சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால், குரங்கு நீர்வீழ்ச்சி வெறிச்சோடி காணப்பட்டது.

பொள்ளாச்சி

சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால், குரங்கு நீர்வீழ்ச்சி வெறிச்சோடி காணப்பட்டது.

வனத்துறையினர் தடை

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மற்றும் பூங்காவிற்கு செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். இதேபோன்று குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

இதற்கிடையில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டன. இந்த நிலையில் தடை உத்தரவு காரணமாக மேற்கண்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆழியாறு பூங்கா முன்பு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதற்கிடையில் பூங்கா பகுதிக்குள் அத்துமீறி செல்வதை தடுக்க ஊழியர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

வண்ணத்துப்பூச்சி பூங்கா

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மழைப்பொழிவு இல்லாததால் தற்போது குரங்கு நீர்வீழ்ச்சியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டுகிறது. இதற்கிடையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்வதை தடுக்க நுழைவு வாயில் மூடப்பட்டது. மேலும் அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் யானை நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் வாகனம் மூலம் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கிடையில் சோதனை சாவடி அருகில் உள்ள வணத்துப்பூச்சி பூங்காவை சுற்றி பார்க்க கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story