பொங்கல் பண்டிகையை கொண்டாடிய யானைகள்

கோழிகமுத்தி முகாமில் வளர்ப்பு யானைகள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தன.
பொள்ளாச்சி
கோழிகமுத்தி முகாமில் வளர்ப்பு யானைகள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தன.
யானை பொங்கல்
பொள்ளாச்சி அருகே உள்ள உலாந்தி வனச்சரகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப்பை அடுத்த கோழிகமுத்தியில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு அட்டகாசம் செய்யும் காட்டுயானைகளை பிடித்து அதற்கு பயிற்சி அளித்து வளர்த்து வருகின்றனர்.
மேலும் கும்கி யானைகளும் உள்ளன. ஆண்டுதோறும் பொங்கலுக்கு மறுநாள் டாப்சிலிப்பில் வனத்துறை அலுவலகம் அருகில் யானை பொங்கல் கொண்டாடப்படும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோழிகமுத்தி முகாமிலேயே யானை பொங்கல் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மலைவாழ் மக்களுடன் சுற்றுலா பயணிகள் சேர்ந்து பொங்கல் வைத்தனர். அதை தொடர்ந்து முகாமில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. முன்னதாக வளர்ப்பு யானைகள் துதிக்கையால் தண்ணீரை விநாயகர் மீது பீய்ச்சியடித்து அபிஷேகம் செய்தன. இதை தொடர்ந்து யானைகள் துதிக்கையை தூக்கி விநாயகரை வழிப்பட்டன.
முதல் மரியாதை
கும்கி யானையான கலீமிற்கு பட்டம் கட்டி, குடை பிடித்து முதல் மரியாதை செய்து பாகன்கள் அழைத்து வந்தனர். இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் யானைகளுக்கு கரும்பு, பொங்கலை வழங்கினார்.
அப்போது துணை இயக்குனர் கணேசன், கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், வனச்சரகர் காசிலிங்கம் மற்றும் வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், பாகன்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் யானைகள் துதிக்கை தூக்கியபடி பிளறின. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. யானைகள் முன் நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
கரும்பு, சர்க்கரை பொங்கல்
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வழக்கமாக டாப்சிலிப்பில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகில் யானை பொங்கல் கொண்டாப்படும். இந்த ஆண்டு கொரோனா பரவலால் பாதுகாப்பு காரணங்களுக்காக கோழிகமுத்தி முகாமிலேயே கொண்டாடப்பட்டது.
கோழிகமுத்தி முகாமில் 24 யானைகளும், வரகளியாறு முகாமில் 3 யானைகளும் பராமரிக்கப்படுகின்றன. தற்போது யானை பொங்கலில் கலீம் உள்பட 16 ஆண் யானைகளும், 8 பெண் யானைகளும் கலந்துகொண்டன. யானைகளுக்கு கரும்பு, சர்க்கரை பொங்கல், பழங்கள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு காரணங்களுக்காக யானைகளுக்கு சுற்றுலா பயணிகள் உணவு அளிக்க அனுமதி அளிக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஏமாற்றம்
சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
கொரோனா காரணமாக யானை பொங்கல் நடைபெறுமா? என்ற சந்தேகத்தில் வந்தோம். ஆனால் எளிமையான முறையில் யானை பொங்கல் சிறப்பாக நடத்தப்பட்டது. மலைவாழ் மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினோம்.
சின்ன தம்பி, அரிசி ராஜா யானைகள் குழந்தை போன்று அமைதியாக நிற்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் யானைகளுக்கு உணவு கொடுக்க முடியாததுதான் ஏமாற்றமாக இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






