சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை


சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை
x
தினத்தந்தி 15 Jan 2022 3:44 PM GMT (Updated: 15 Jan 2022 3:44 PM GMT)

கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

கோவை

கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

கூடுதல் கட்டுப்பாடுகள்

கோவையில் கொரோனா 3-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி நேற்று முதல் சுற்றுலா தலங்கள், பூங்காக்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடை பயிற்சி மேற்கொள்ள அனுமதி இல்லை.  

நடைபயிற்சி

இதையொட்டி காலையில் ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நடைபயிற்சி சென்றவர்களிடம், அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார், நடைபயிற்சி செல்ல அனுமதி கிடையாது, எனவே திரும்பி செல்லுங்கள் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர். 

மேலும் போலீசார் கூறுகையில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி செல்லவோ, உட்காரவோ அனுமதி கிடையாது. மறு உத்தரவு வரும் வரை இது தொடரும். அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

உயிரியல் பூங்கா

வ.உ.சி. பூங்காவுக்கு செல்ல ஏற்கனவே தடை உள்ளது. ஆனால் அங்குள்ள உயிரியல் பூங்காவுக்கு செல்ல மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், நேற்று உயிரியல் பூங்காவும் மூடப்பட்டது. 

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வந்ததால் நேற்று காலை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் குழந்தைகள் மட்டும் அங்கு குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர்

அபராதம்

இதேபோன்று வ.உ.சி. மைதானம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடக்கும் குளக்கரைகளிலும் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை. இது தவிர ஆர்.எஸ்.புரம், காந்திபார்க், டவுன்ஹால், உக்கடம், காந்திபுரம் உள்பட மாவட்டம் முழுவதும் வாகன ஓட்டிகள் முககவசம் அணிந்து இருக்கிறார்களா? என்பதை கண்காணிக்க வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி முககவசம் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.


Next Story