பொள்ளாச்சி பகுதியில் முழு ஊரடங்கு கடைகள் அடைப்பு சாலைகள் வெறிச்சோடின

முழு ஊரடங்கு காரணமாக பொள்ளாச்சி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டதோடு, சாலைகள் வெறிச்சோடின. மேலும், போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி
முழு ஊரடங்கு காரணமாக பொள்ளாச்சி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டதோடு, சாலைகள் வெறிச்சோடின. மேலும், போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
2-வது வார முழுஊரடங்கு
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, தினமும் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே ஒமைக்ரான் வைரசும் ஆங்காங்கே பொதுமக்களை தாக்கி வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு கடந்த 6-ந்தேதி முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி 2-வது வார ஞாயிற்றுகிழமையான நேற்று பொள்ளாச்சி பகுதியில் காய்கறி, மளிகைக் கடைகள், ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. பால் விற்பனை நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியவாசிய சேவைகள் வழக்கம்போல் செயல்பட்டன.
வாகனங்கள் பறிமுதல்
பஸ்கள் ஓடவில்லை. கார், ஆட்டோ போன்ற வாகனங்களும் இயங்கவில்லை. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி சென்ற வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. சில இடங்களில் சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டன. ஓட்டலில் பார்சல் சேவை அனுமதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் உணவு வாங்குவதற்கு வந்தவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே காணப்பட்டது.
பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணி உத்தரவின்பேரில், போலீசார் பல்லடம் ரோடு, உடுமலை ரோடு, கோவை ரோடு, பாலக்காடு ரோடு, பஸ் நிலையங்கள், வடக்கிபாளையம் பிரிவு உள்பட பல இடங்களில் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தேவையில்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றிய பள்ளி, கல்லூரி மாணவர்களை போலீசார் வீட்டிற்கு சென்று படிப்பில் கவனம் செலுத்துமாறு எச்சரித்து திருப்பி அனுப்பினர். சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முக்கிய சாலைகள் வெறிச்சோடின
தன்னார்வலர்கள் சிலர் ஏழை, எளிய மற்றும் ரோட்டோரங்களில் வசிப்பவர்களுக்கு இலவசமாக உணவு, முககவசம், குடிநீர் வழங்கினர். சுல்தான்பேட்டை ஒன்றியத்திலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடாததால் பொள்ளாச்சி பஸ் நிலையங்கள் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மொத்தத்தில் நேற்று பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கினர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில்பாளையம் பகுதிகளில் வழக்கமாக திறக்கப்படும் மளிகை கடை, காய்கறி கடைகள், டீ கடை, பேக்கரி, ஹார்டுவேர்ஸ், ஜவுளிக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் மூடப்பட்டு இருந்தது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இறைச்சி மற்றும் மீன் கடைகள் மூடிக் கிடந்தது. மேலும் டாஸ்மாக் கடைகளும் மூடிக்கிடந்தன. ஓட்டல்கள், மெடிக்கல் களைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்ததால் கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு, கிணத்துக்கடவு மேம்பாலம், ஆர். எஸ். ரோடு, சிக்கலாம்பாலையம் சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
அதேபோல் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தியேட்டர்களும் மூடிக் கிடந்தது. கிராமப்பகுதியில் ஓரளவு பொதுமக்கள் நடமாட்டம் இருந்தது.ஆனால் கிணத்துக்கடவு பகுதிகளில் ஆட்கள் நடமாட்டமின்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.கிணத்துகடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தடையை மீறி வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பிவைத்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை -பொள்ளாச்சி 4 வழிச்சாலை நேற்று வாகனங்கள் சத்தம் இன்றி வெறிச்சோடி அமைதியாக காணப்பட்டது.
வால்பாறை
முழு ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லகூடிய வால்பாறை பகுதி வெறிச்சோடியது. வால்பாறை நகரில் மக்கள் அதிகம் நடமாட்டமுள்ள காந்தி சிலை பஸ்நிறுத்தம், வால்பாறை -பொள்ளாச்சி மெயின் ரோடு வெறிச்சோடியது.
வால்பாறை பகுதியின் முக்கிய இடமாக இருக்கும் நகராட்சி மார்க்கெட் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. முழு ஊரடங்கை முன்னிட்டு வால்பாறை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story






