3 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு

விசைத்தறியாளர்களின் தொடர்வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதுதொடர்பாக வருகிற 20-ந்தேதி பேச்சுவார்த்தை நடக்கிறது.
சுல்தான்பேட்டை
விசைத்தறியாளர்களின் தொடர்வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதுதொடர்பாக வருகிற 20-ந்தேதி பேச்சுவார்த்தை நடக்கிறது.
வேலை நிறுத்த போராட்டம்
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கி வந்தனர். கடந்த 2014-ம் ஆண்டு முதல் கூலி உயர்வு வழங்கவில்லை. இந்தநிலையில், ஊதிய கூலி உயர்வு ஒப்பந்தம் சமீபத்தில் இறுதி செய்யப்பட்டது. அதன்படி சோமனூர் ரகங்களுக்கு 23 சதவீதம் மற்ற இதர ரகங்களுக்கு 20 சதவீதம் கூலி உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், கூலி உயர்வு அமல்படுத்தாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் இழுத்தடித்து வந்தனர். இதனால் கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 9-ந்தேதி முதல் தங்கள் விசைத் தறிகளை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.400 கோடி இழப்பு
இதனால், தினமும் ரூ.50 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வருகிறது.நேற்றுவுடன் கூடிய 8-வது நாளில் ரூ.400 கோடி துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், சுல்தான்பேட்டை ஒன்றியத்தின் ரூ.12 கோடி உற்பத்தி இழப்பும் அடங்கும். கோவை, திருப்பூர் மாவட்டத்தில் முக்கிய தொழில்களில் ஒன்றான விசைத்தறி தொழில் வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட் டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளதுடன் சற்று பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது.
வருகிற 20-ந்தேதி கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள், அதிகாரிகள் என முத்தரப்பில், நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் டிசம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட கூலி உயர்வை தாமதம் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுல்தான்பேட்டை வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story






