காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நிலத்துக்கு எல்லைக்கல் நடும் பணி தொடக்கம்

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நிலத்துக்கு எல்லைக்கல்லை இணை ஆணையர் பொன்.ஜெயராமன் நட்டு பணியை தொடக்கி வைத்தார்.
பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படுவது காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்கள் பல ஊர்களில் இருந்து வருகிறது. காஞ்சீபுரம் அருகே திருமால்பட்டு என்ற கிராமத்தில் இந்த கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான 8.80 ஏக்கர் பரப்பளவிலான நிலம் அளவீடு செய்யப்படாமல் இருந்து வந்தது.
தமிழக அரசு உத்தரவின்படி கோவில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லைக்கல் நடும் பணி நடந்து வரும் நிலையில் திருமால்பட்டு கிராமத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் நிலத்தையும் செயற்கை கோள் உதவியுடன் ரோவர் கருவி மூலம் அளவீடு செய்யும் பணி நடந்தது.
கோவில் நிலங்கள் பிரிவுக்கான இந்து சமய அறநிலையத்துறையின் வருவாய் அலுவலர் கல்பனா, தாசில்தார் வசந்தி, காஞ்சீபுரம் சரக இணை ஆணையர் பொன்.ஜெயராமன், கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன் மற்றும் அறநிலையத்துறையின் கீழ் உரிமம் பெற்ற நில அளவையர்கள் முன்னிலையில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து அளவீடு செய்யப்பட்ட இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக்கல்லை இணை ஆணையர் பொன்.ஜெயராமன் நட்டு பணியை தொடக்கி வைத்தார்.
Related Tags :
Next Story






