ஆட்டோவை திருடி சென்றவர்களை தட்டி கேட்ட கிராம மக்களை அரிவாளால் தாக்க முயற்சி


ஆட்டோவை திருடி சென்றவர்களை தட்டி கேட்ட கிராம மக்களை அரிவாளால் தாக்க முயற்சி
x
தினத்தந்தி 20 Jan 2022 7:06 PM IST (Updated: 20 Jan 2022 7:06 PM IST)
t-max-icont-min-icon

ஆட்டோவை திருடி சென்றவர்களை தட்டி கேட்ட கிராம மக்களை அரிவாளால் தாக்க முயன்றனர். அவர்களை கிராம மக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஆட்டோவை தள்ளிச்சென்றனர்

செங்கல்பட்டு மாவட்டம் திருவடிசூலம் சன்னதி தெரு பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். நெல் வியாபாரி. இவருடைய மகன் ஏகாம்பரம். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். வழக்கம்போல் தன் வேலையை முடித்துவிட்டு நேற்று முன் தினம் இரவு தனது ஆட்டோவை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச்சென்றார்.

அப்போது 5 பேர் அந்த இடத்திற்கு வந்து ஆட்டோவை மெதுவாக தள்ளிச் சென்றுள்ளனர். நள்ளிரவில் கிராமத்தில் ஆட்டோவை 4 பேர் தள்ளிக்கொண்டு செல்வதை பார்த்த அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் ஏன் ஆட்டோவை தள்ளி செல்கிறீர்கள் என கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு ஆட்டோ ரிப்பேர் ஆகி விட்டது. முதலாளிதான் சரி செய்வதற்காக எங்களிடம் ஒப்படைத்துள்ளார் என்றனர். அப்போது அவர் ஆட்டோ முதலாளியின் பெயரை சொல்லுங்கள் என்று கேட்டவுடன் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர் சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார்.

அரிவாளால் தாக்க முயற்சி

இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் 5 பேரும் தங்கள் கையில் வைத்திருந்த அரிவாளை காட்டி அங்கு இருந்த பொதுமக்களை மிரட்டி உள்ளனர். சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஏகாம்பரமும் வந்துள்ளார். மேலும் கையில் வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியை பயன்படுத்தி பொதுமக்களை தாக்க முயன்றனர்.

இதனையடுத்து பொதுமக்கள் ஆட்டோவை திருடி சென்ற நபர்கள் தப்பி ஓடாமல் இருக்க 5 நபர்களை கட்டி அடித்து, உதைத்து பின்னர் செங்கல்பட்டு தாலுகா போலீசில் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் 5 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த அப்பு என்ற பிரகாஷ், (வயது 19), சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த சசிகுமார் (21), தனுஷ் (23) சென்னை கிண்டியை சேர்ந்த சஞ்சய் (19), சென்னை தரமணியை சேர்ந்த விக்னேஷ் (22) என்பது தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே சில திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story