பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளில் கடைகள் அடைப்பு சாலைகள் வெறிச்சோடின


பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளில் கடைகள் அடைப்பு சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 23 Jan 2022 7:44 PM GMT (Updated: 23 Jan 2022 7:44 PM GMT)

முழு ஊரடங்கையொட்டி பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின. சுவாமிமலை கோவில் முன்பு திருமணம் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை: 
முழு ஊரடங்கையொட்டி பட்டுக்கோட்டை, கும்பகோணம்  பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின. சுவாமிமலை கோவில் முன்பு திருமணம் நடைபெற்றது. 
முழு ஊரடங்கு 
கொரோனா தொற்று 3-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகஅரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கையை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழகஅரசு அறிவித்தது. அதன்படி கடந்த 9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்தவாரம் 16-ந் தேதி 2-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நேற்று 3-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
பட்டுக்கோட்டை 
பட்டுக்கோட்டையில் முழுஊரடங்கையொட்டி பெரியதெரு, தலையாரித்தெரு, அறந்தாங்கி சாலை, காந்தி சதுக்கம், பெரிய கடைத்தெரு, மணிக்கூண்டு  உள்ளிட்ட நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி  கிடந்தன. வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கின. ஓட்டல்களில் பார்சலில் உணவு  பொருட்கள் வழங்கப்பட்டன. போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல பட்டுக்கோட்டை பகுதியில் தம்பிக்கோட்டை, தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி உள்பட அனைத்துக் கிராம பகுதிகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
பாபநாசம்
பாபநாசம், கோபுராஜபுரம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ெரயில்வே நிலையம் ரோடு, கடைவீதி, 108 சிவாலயம், வங்காரம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சரபோஜி ராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஊரடங்கின் போது  தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.
கும்பகோணம் 
ஊரடங்கையொட்டி கும்பகோணம் முழுவதும் 7 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் ஓட்டல்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், தாராசுரம் காய்கறி மார்க்கெட், கும்பகோணம் மீன் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்தும்   அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி கும்பகோணம் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று முகூர்த்த தினம் என்பதால் கும்பகோணத்தில் பல்வேறு திருமண மண்டபங்களில் அரசின் விதிமுறைப்படி சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் 100-க்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர். கும்பகோணம் பகவத் படித்துறை அருகே 15 பேர் கலந்து கொண்ட பூணூல் அணியும் நிகழ்ச்சி எளிமையான முறையில் நடைபெற்றது. 
கபிஸ்தலம் 
ஊரடங்கையொட்டி சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் மூடப்பட்டு இருந்தது. ஏற்கனவே கோவில்களில் திருமணம் செய்ய வேண்டும் என்ற நேர்த்திக்கடன் இருந்ததால் மணமக்கள் சிலர் சுவாமிமலை கோவில் முன்பு உறவினர்களுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் பூட்டிய கோவில் முன்பு தாலி கட்டி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதில் மணமக்களின் குடும்பத்தை சேர்ந்த குறைந்த அளவு உறவினர்களே கலந்து கொண்டனர். மேலும் திருமண மண்டபங்கள், வீடுகளில் நடந்த திருமணங்களும் குறைந்த அளவு உறவினர்களுடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்கள் இல்லாமல் எளிமையான முறையில் நடைபெற்றன.

Next Story