நெடுஞ்சாலை பணி நடக்கும் இடத்தில் கிராம மக்கள் மறியல்


நெடுஞ்சாலை பணி நடக்கும் இடத்தில் கிராம மக்கள் மறியல்
x
தினத்தந்தி 23 Jan 2022 8:52 PM GMT (Updated: 23 Jan 2022 8:52 PM GMT)

நெடுஞ்சாலை பணி நடக்கும் இடத்தில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மீன்சுருட்டி:

சாலை மறியல்
விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி -தஞ்சாவூர் இடையே 165 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டம் கடந்த 2010-ம் ஆண்டில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, கும்பகோணம் ஆகிய பகுதிகளை இணைக்கும் இந்த நெடுஞ்சாலை பணிகள் கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு கட்டமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை அரியலூர் மாவட்டம், தென்னவநல்லூர் சேர்ந்த கிராம மக்கள், அந்த சாலைக்கு இடையே இணைப்பு சாலையை மூடாமல் மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என்று கோரி சாலை பணிகள் நடைபெறும் இடத்தின் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மீன்சுருட்டி போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியலால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இணைப்பு சாலை
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தென்னவநல்லூரில் தற்போது நெடுஞ்சாலைப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த கிராமத்தை அடுத்துள்ள ஆயுதகளம், வேம்புகுடி, உட்கோட்டை, காக்கனேரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் அன்றாட போக்குவரத்துக்கு பயன்படும் வகையில் தென்னவநல்லூர் இணைப்புச் சாலை உள்ளது. தற்போது இணைப்புச் சாலையைத் தடுத்து போக்குவரத்துக்கு இடமில்லாமல் நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடக்கிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஏற்கனவே கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனாலும் தற்போது முழு முனைப்போடு இணைப்புச் சாலையை முடக்கி நெடுஞ்சாலை பணிகள் நடக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி இணைப்புச் சாலையை முடக்காமல் குறிப்பிட்ட இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும். அதன்பின்னர் சாலைப் பணிகளை தொடங்க வேண்டும், என்றனர்.

Next Story