பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜாமர் கருவிகள் பொருத்தப்படும்- போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி


பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜாமர் கருவிகள் பொருத்தப்படும்- போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி
x
தினத்தந்தி 23 Jan 2022 9:00 PM GMT (Updated: 23 Jan 2022 9:00 PM GMT)

தொழில் அதிபர்களை ரவுடிகள் மிரட்டுவதை தடுக்கும் வகையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜாமர் கருவிகள் பொருத்தப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.

பெங்களூரு:

தொழில் அதிபர்களுக்கு மிரட்டல்

  பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் தான் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவும் அடைக்கப்பட்டு இருந்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைதிகளிடம் லஞ்சம் வாங்கி கொண்டு போலீசார் கஞ்சா விற்பனை செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

  இந்த நிலையில் அந்த சிறையில் உள்ள ரவுடிகள் சிலர் கடந்த சில மாதங்களாக செல்போனில் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்களை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். மேலும் சிறையில் இருந்து கொண்டே, கூட்டாளிகள் மூலம் ரவுடிகள் குற்றச்சம்பவங்களையும் அரங்கேற்றி வருகின்றனர்.

ஜாமர் கருவிகள் பொருத்தப்படும்

  இந்த நிலையில் கைதிகள் சிறையில் செல்போன் பயன்படுத்துவது குறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கும்போது கூறியதாவது:-

  பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ரவுடிகள், சிறையில் இருந்தபடியே கூட்டாளிகள் மூலம் குற்றச்சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். மேலும் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி பணம் பறித்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் ஜாமர் கருவிகள் பொருத்தப்படும். இதற்கு ரூ.60 கோடி செலவு ஆகிறது. விரைவில் சிறையில் ஜாமர் கருவிகள் பொருத்தப்படும்.

  பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அலுவலகத்தை அமைப்பது பற்றி மத்திய அரசிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்து உள்ளது. பல்லாரி, பெலகாவியில் உயர்தர தடய அறிவியல் ஆய்வகங்கள் அமைய உள்ளன. இதன்மூலம் வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காணப்படும். இது கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய உதவியாக இருக்கும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story