3-வது வாரமாக முழு ஊரடங்கு: ஈரோட்டில் மக்கள் நடமாட்டமின்றி ரோடுகள் வெறிச்சோடியது


3-வது வாரமாக முழு ஊரடங்கு: ஈரோட்டில் மக்கள் நடமாட்டமின்றி ரோடுகள் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 23 Jan 2022 9:34 PM GMT (Updated: 23 Jan 2022 9:34 PM GMT)

ஈரோட்டில் 3-வது வாரமாக நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் நடமாட்டமின்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது.

ஈரோடு
ஈரோட்டில் 3-வது வாரமாக நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் நடமாட்டமின்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரசும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதன்படி கடந்த 6-ந்தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ரோடுகள் வெறிச்சோடியது
அதன்படி நேற்று 3-வது வாரமாக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி ஈரோடு மாநகர் பகுதியில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் மாநகர் பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பூங்கா பகுதி, பிரப்ரோடு, நேதாஜி ரோடு, காந்திஜி ரோடு, மேட்டூர் ரோடு, கருங்கல்பாளையம், சத்தி ரோடு, காளைமாடு சிலை, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, பஸ் நிலையம், சுவஸ்திக் கார்னர், அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, ரெயில் நிலையம், பெருந்துறை ரோடு, நசியனூர் ரோடு போன்ற பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன. முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டிலேயே முடங்கினர்.
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட், சம்பத் நகர் மற்றும் பெரியார் நகர் பகுதியில் உள்ள உழவர் சந்தைகளும் நேற்று மூடப்பட்டு இருந்தன. அம்மா உணவகங்கள் நேற்று வழக்கம் போல் செயல்பட்டன.
பஸ்கள் ஓடவில்லை
ஓட்டலில் பார்சலில் உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவு வழங்கப்பட்டன. அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், ஆஸ்பத்திரிகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவை நேற்று வழக்கம்போல் செயல்பட்டன.
பெட்ரோல் மற்றும் டீசல் ‘பங்க்’குகள் வழக்கம்போல் இயங்கின. இந்த முழு ஊரடங்கையொட்டி பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் ஈரோடு பஸ் நிலையம் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ஈரோடு ஸ்டோனி பாலம் அருகில் உள்ள மீன் மார்க்கெட், கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் கோழி, ஆட்டு இறைச்சி கடைகளும் நேற்று பூட்டப்பட்டு கிடந்தது.

Next Story