6-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


6-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Jan 2022 12:25 AM GMT (Updated: 24 Jan 2022 12:25 AM GMT)

குன்றத்தூரில் 6-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.

பூந்தமல்லி,

குன்றத்தூர் துரைசாமி முதலி தெருவைச் சேர்ந்தவர் சிவா, ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வசந்தி. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன் நவீன் (வயது 8). இவர்களுக்கு வைஷ்ணவி (13) என்ற மகளும் இருந்தாள்.

வைஷ்ணவி, கோவூரில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்த வந்தாள். நேற்று முன்தினம் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். இரவு நவீன் விளையாடி விட்டு வீட்டுக்கு வந்தபோது கதவு உள்புறமாக சாத்தப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது தனது அக்காள் வைஷ்ணவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினான்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று வைஷ்ணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வைஷ்ணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார், தற்கொலை செய்த மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதே குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒரு பெண், அங்கு வசிக்கும் வாலிபருடன் பேசி வந்ததை மாணவி வைஷ்ணவி அங்கிருந்தவர்களிடம் கூறியதாகவும், இதனால் அந்த வாலிபரின் பெற்றோர், வைஷ்ணவியை கண்டித்ததுடன் அவரது பெற்றோர் வந்ததும் தெரிவிப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.

இதனால் பயந்துபோன மாணவி வைஷ்ணவி தற்கொலை செய்து இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும், தற்கொலைக்கு முன்னதாக மாணவி வைஷ்ணவி, தன்னை அந்த வீட்டில் இருந்த அக்கா திட்டியதாக தனது நோட்டில் எழுதி வைத்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story