திருடிய பொருட்களை விற்க வந்த முன்னாள் போலீஸ்காரர் கைது


திருடிய பொருட்களை விற்க வந்த முன்னாள் போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2022 11:53 AM GMT (Updated: 24 Jan 2022 11:53 AM GMT)

சென்டிரல் ரெயில் நிலையத்தில் திருடிய பொருட்களை விற்க வந்த முன்னாள் போலீஸ்காரர் கைதானார். அவரிடம் இருந்து 5½ பவுன் நகை மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

முன்னாள் போலீஸ்காரர்

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி வந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர், ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அரக்கோணத்தை சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் செந்தில்குமார் (வயது 40) என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், அவர் ஏற்கனவே திருடி வைத்திருந்த நகை மற்றும் செல்போன்களை சென்னை மூர்மார்க்கெட்டில் விற்பதற்காக ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்டிரல் ரெயில் நிலையம் வந்ததும் தெரிந்தது.

கைது

இதையடுத்து 6 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய செந்தில்குமாரை கைது செய்த சென்டிரல் ரெயில்வே போலீசார், அவரிடம் இருந்த 5½ பவுன் நகைகள் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

செந்தில்குமார், சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணிபுரிந்தபோது, பல்வேறு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டு இருந்ததால் கடந்த 2009-ம் ஆண்டு போலீஸ் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஆந்திரா, சென்னை போன்ற நகரங்களில் ரெயில் பயணிகளிடம் தொடர்ந்து அவர் கைவரிசை காட்டி வந்த நிலையில், தற்போது சென்டிரல் ரெயில்வே போலீசிடம் வசமாக சிக்கிக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story