காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை: கலெக்டர் ஆர்த்தி


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை: கலெக்டர் ஆர்த்தி
x
தினத்தந்தி 24 Jan 2022 12:02 PM GMT (Updated: 24 Jan 2022 12:02 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.

தடுப்பூசி முகாம்கள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 400 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம்களை பார்வையிட்ட பின்னர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கூறியதாவது:-

முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் காஞ்சீபுரம் மாவட்டம் முதன்மை இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் 2-வது தவணை தடுப்பூசியை 77 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர்.

இதுவரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 250 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை தொலைபேசி மூலமாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் தொடர்பு கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவருமே 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். ஏனெனில் அதன் மூலமே நோய் எதிர்ப்பு சக்தி முழுவதுமாக கிடைக்கும்.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் போன்றவற்றில் இருந்து நம்மை நாமே தற்காத்து கொள்ள இதைவிட பேராயுதம் வேறு எதுவும் இல்லை.

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் தொற்றில் இருந்து தப்பித்து கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகத்துடன் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு நல்குவதும் அவசியமாகும்.

தற்போது 15 முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வந்தாலும் அவ்வப்போது சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது.

1,948 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டியவர்களை் பொறுத்தவரை மொத்தம் 7,479 பேர் உள்ளனர். இவர்களில் 1,948 பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

இது 26 சதவீதம் மட்டுமேயாகும். எனவே இதுவரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர் கள் உடனடியாக செலுத்திக்கொள்ள வேண்டும். அவ்வப்போது நடைபெறும் சிறப்பு முகாம்களையும் பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story