தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Jan 2022 7:44 PM GMT (Updated: 24 Jan 2022 7:44 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

ரெயில்வே கீழ் பாலம் சீரமைக்கப்படுமா?
  தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை அண்ணாமலைநகர் 2-வது குறுக்கு தெருவில் ரெயில்வே கீழ் பாலம் ஒன்று உள்ளது. இந்தப் பாலத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காடுபோல் காட்சியளிக்கிறது. குறிப்பாக கீழ் பாலத்தில் கழிவுநீர் தேங்கி அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக ரெயில்வே கீழ் பாலத்தை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள ரெயில்வே கீழ் பாலத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-அண்ணாமலைநகர் பகுதிமக்கள், தஞ்சை.
போக்குவரத்து நெரிசல்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி சின்னக்கடைத்தெரு, பழனியப்பன் தெரு, தலையாரித்தெரு, வடசேரி முக்கம், கைகாட்டி மற்றும் பெரியக்கடை வீதியில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்களில் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் அடிக்கடி ஆம்புலன்சுகள் சிக்கிக்கொள்கின்றன. இதனால் அவசரமாக சிகிச்சைக்குச் செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?                          -பொதுமக்கள், பட்டுக்கோட்டை.
விவசாய நிலத்துக்குள் வீணாக செல்லும் குடிநீர்
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி பாபுராஜபுரத்தை அடுத்த புளியஞ்சேரி-குடிதாங்கி சாலையோரத்தில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் குழாயிலிருந்து தண்ணீர் வெளியேறி விவசாய நிலத்திற்குள் செல்கிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குடிநீர் குழாயிலிருந்து தண்ணீர் வெளியேறுவதால் அந்தப் பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?
-புளியஞ்சேரி பொதுமக்கள், கும்பகோணம்.

Next Story