தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Jan 2022 7:56 PM GMT (Updated: 24 Jan 2022 7:56 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது
சேலம் அழகாபுரம் மதுரா தோட்டம் பகுதியில் குடிநீர் குழாய் பராமரிப்பிற்காக குழி தோண்டப்பட்டது. தற்போது பராமரிப்பு பணி நிறைவடையாமல் உள்ளதால், அப்பகுதி மக்கள் தண்ணீர் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர் என்று கடந்த 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் சீரமைக்கும் பணியை விரைந்து முடித்தனர். இதற்கு, நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-பி.இருதயராஜ், பெரியபுதூர், சேலம்.
மதுபிரியர்களால் தொல்லை
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் டாஸ்மாக் கடைகள் மட்டும் அல்லாமல் சந்து கடைகளில் பதுக்கி வைத்தும் மது விற்பனை நடக்கிறது. இதனால் மது பிரியர்கள் எந்த நேரமும் மதுவை குடித்து விட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். குறிப்பாக கிராமப்பகுதி மக்கள் கடும் வேதனைக்கு ஆளாகின்றனர். எனவே பதுக்கி வைத்து மது விற்பனை செய்வதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
-ஊர்மக்கள், வாழப்பாடி, சேலம்.
விபத்துக்களை ஏற்படுத்தும் மாடுகள்
கிருஷ்ணகிரி நகர் வழியாக பெங்களூரு, சென்னை, சேலம், புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதற்கிடையே இந்த பகுதியில் உள்ளவர்களது மாடுகள் தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரிகின்றன. வாகனங்கள் செல்லும் போது குறுக்கே மாடுகள் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. எனவே மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிவதை தடுக்க வேண்டும். சாலைகளில் மாடுகளை விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
-முருகன், கிருஷ்ணகிரி.
பழுதான மின்மோட்டார்
தர்மபுரி மாவட்டம் பிக்கிலி ஊராட்சி பாணாகட்டு கிராமத்தில் மின் மோட்டார் மூலம் குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பி அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களாக குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்மோட்டார் பழுதடைந்து விட்டது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீரை தேடி அலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மின்மோட்டார் பழுதை சரிசெய்து பாணாகட்டு கிராமத்தில் குடிநீர் வழங்கப்படுமா?
-ஊர்பொதுமக்கள், பாணாகட்டு, பென்னாகரம்.
ஆபத்தான மின்கம்பம் 
நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆர்.பி.காட்டூர் பகுதியில் மயானம் உள்ளது. அங்குள்ள மின் கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் தெரியும்படி மின்கம்பம் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. வேகமாக காற்று வீசினால் மின்கம்பம் எந்த நேரம் வேண்டுமானாலும் சாய்ந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான இந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், ஆர்.பி.காட்டூர், நாமக்கல்.
மின்விளக்கு எரியவில்லை
சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் பாலத்தில் மின்விளக்கு சரிவர எரிவதில்லை. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடக்கின்றன. மேலும் வாகனங்கள் அதிவேகமாக சென்று விபத்தில் சிக்குகின்றன. எனவே கொண்டலாம்பட்டி மெயின் பாலத்தில் மின்விளக்குகள் எரிய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
-ஜி.வேலாயுதம், அம்மாபேட்டை, சேலம்.
உடைந்த குடிநீர் தொட்டி
சேலம் 33-வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவில் குடிநீர் தொட்டி உடைந்து பயன்படாமல் கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் தண்ணீர் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி புகார் தெரிவித்தும் எந்தவித பயனும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் தொட்டியை சரி செய்து பொதுமக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், 33-வது வார்டு, சேலம்.
நோய் பரவும் அபாயம்
சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி 6-வது வார்டில் மாதக்கணக்கில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கிறார்கள். துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், கன்னங்குறிச்சி, சேலம்.
சேலம் கொண்டலாம்பட்டி மேட்டுத்தெரு ஏரிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அந்த பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அள்ளி சுத்தம் செய்வார்களா?
-வேல்முருகன், கொண்டலாம்பட்டி, சேலம்.
சேலம் அம்மாபேட்டை 40-வது வார்டு வித்யா நகரில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டது. சாக்கடையில் இருந்து அள்ளப்பட்ட மண், பல நாட்கள் ஆகியும் இதுவரை அகற்றப்படவில்லை. இ்ந்த பகுதியில் பள்ளிக்கூடம் அமைந்துள்ளதால் மாணவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இது பற்றி புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரத்தனகிரி, வித்யாநகர், சேலம்.
காலாவதியான மருந்து, மாத்திரைகள் 
தர்மபுரி-திருப்பத்தூர் சாலையில் தூதரையான்கொட்டாய் அருகில் உள்ள சாலையோரத்தில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் கொட்டப்படுகின்றன. இதை சாலையோரத்தில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகள் சாப்பிடுவதால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் சில சமயங்களில் மருந்து, மாத்திரை குப்பைகளுக்கு சிலர் தீவைத்து விடுகிறார்கள். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன், தூதரையான்கொட்டாய், தர்மபுரி.

Next Story