ஷீனா போரா உயிருடன் இருக்கிறார் இந்திராணி கோர்ட்டில் மனு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 24 Jan 2022 8:27 PM GMT (Updated: 24 Jan 2022 8:27 PM GMT)

ஷீனா போரா உயிருடன் இருப்பதாக இந்திராணி முகர்ஜி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மும்பை, 
ஷீனா போரா உயிருடன் இருப்பதாக இந்திராணி முகர்ஜி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதிய திருப்பம்
சொந்த மகளான ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் சிறை வாசம் அனுபவத்து வருபவர் இந்திராணி முகர்ஜி. பல்வேறு திருப்பங்கள் நிறைந்த மர்மமான இந்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு தொலைக்காட்சி நிர்வாகிகளான இந்திராணி முகர்ஜி, கணவர் பீட்டர் முகர்ஜி மற்றும் அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் புதிய திருப்பமாக இந்திராணி முகர்ஜி தனது மகள் ஷீனா போரா உயிருடன் இருப்பதாக கூறி வருகிறார்.
இதுகுறித்து அவர் மும்பை சிறப்பு கோர்ட்டில் கையால் எழுதப்பட்ட மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் இன்ஸ்பெக்டர்
கடந்த 2021-ம் ஆண்டு பைகுல்லா பெண்கள் சிறையில் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர்சிங் சம்பந்தப்பட்ட மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஷா கோர்கே என்ற பெண்ணின் அறிமுகம் கிடைந்து.
அவர் என்னிடம் கடந்த ஜூன் 2021-ம் ஆண்டு ஸ்ரீநகரில் ஷீனா போராவை போன்ற பெண்ணை சந்தித்ததாக தெரிவித்தார்.
ஆஷா கோர்கே அந்த பெண்ணை அணுகி நீங்கள் ஷீனா போராவா என்று கேட்டபோது, அவர் உங்களுக்கு என்னை எப்படி தெரியும்? நீங்கள் யார் என்று அந்த பெண் கோர்கேவிடம் கேட்டுள்ளார்.
புதிய வாழ்க்கை
அவர் தான் போலீசாக இருப்பதை வெளிப்படுத்தியதுடன், என்னை சிறை கம்பிகளுக்கு பின்னால் அடைக்க வந்தீர்களா? என ஷீனா போரா கேட்டுள்ளார். நீங்கள் உண்மையை வெளிப்படுத்தி பெற்றோரை விடுவிக்க வழி செய்யவேண்டும் என பெண் போலீஸ் கூறியதற்கு, ஷீனா போரா தான் புதிய வாழ்க்கையை தொடங்கி உள்ளதாகவும். பழைய வாழ்க்கைக்கு திரும்ப விரும்பவில்லை என்றும் மறுத்துள்ளார்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஷீனா போரா உயிருடன் இருப்பதாக தான் கூறியதை உறுதிப்படுத்த மத்திய புலனாய்வு பிரிவு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்பதை அறிய விரும்புவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். 

Next Story