தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 Jan 2022 5:20 AM GMT (Updated: 25 Jan 2022 5:20 AM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

 தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே வனத்துறை சார்பில் மழைக்காலங்களில் மழைநீரை சேமித்து வனவிலங்குகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்க ஆற்காடு வனச் சரகம் சார்பில் 13 ஆண்டுக்கு முன்பு 2 தடுப்பணைகள் கட்டப்பட்டன. தற்போது தடுப்பணைகள் சேதமடைந்ததால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. தடுப்பணைகளை வனத்துறை அதிகாரிகள் சீரமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும்.

  -கோவர்த்தனகிரி, சோளிங்கர்.

நெடுஞ்சாலை ஓரம் கொட்டப்படும் குப்பைகள்

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காதர்பேட்டையில் உள்ள ஒரு பீடி கம்பெனி எதிரே சாலையோரம் தினமும் குப்பைகளையும், மாட்டிறைச்சி கழிவுகளையும் இரவில் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் அந்த வழியாகச் செல்லும் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துவோர் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -முகமது சலீம், காதர் பேட்டை.

சிமெண்டு சாலையை சீரமைப்பார்களா?

  திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா பூதமங்கலம் கிராமத்தில் உடையார் தெரு வழியாக அவலூர்பேட்டை செல்லும் சிமெண்டு சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -விவேக், பூதமங்கலம்.

பொதுக்கழிப்பிடம் தேவை

  கே.வி.குப்பம் தாலுகா காட்பாடி சாலையில் வடுகந்தாங்கல் பஸ் நிறுத்தம் உள்ளது. கீழ்முட்டுக்கூர், அங்ராங்குப்பம், முடினாம்பட்டு, கொத்தமங்கலம், கீழ்விலாச்சூர், பில்லாந்திப்பட்டு, கெங்கசாணிக்குப்பம், சென்றாம்பள்ளி, மேல்மாயில் போன்ற ஊர்களுக்கு செல்லும் மையமாக வடுகந்தாங்கல் உள்ளது. தினமும் மார்க்கெட்டுக்கு ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். எனவே, வடுகந்தாங்கலில் ஒரு பொதுக்கழிவறை கட்ட வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  ஆர்.வி.கோபால், வடுகந்தாங்கல், கே.வி.குப்பம்.

சாலை அமைத்துத் தருவார்களா?

  வேலூரை அடுத்த துத்திக்காடு ரங்காபுரம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். அந்தக் கிராமத்துக்கு செல்லும் பாதை மோசமாக உள்ளது. நடந்து செல்வோரும், வாகனங்களில் செல்வோரும் சிரமப்படுகின்றனர். சாலையை சீர் செய்யக்கோரி பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -சுரேஷ், துத்திக்காடு.

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா பழையபாளையம் கிராமத்தில் இருந்து நெரிஞ்சந்தாங்கல் கிராமம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக சாலை போட தோண்டப்பட்டு ஒரு ஆண்டாக ஆகியும் இன்னும் சாலை பணியை தொடங்கி முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. நடந்தும், வாகனங்களிலும் செல்லவும் சிரமமாக உள்ளது. கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைவில் தொடங்க வேண்டும்.
  ரா.சதீஷ், பழையபாளையம்.

குப்பைத்தொட்டியை அகற்றுவார்களா?

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் ஜீவா நகர் 2-வது தெருவில் குப்பைத்தொட்டி உள்ளது. அந்தக் குப்பைத்தொட்டி உடைந்துள்ளது. அதில், அங்குள்ளவர்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள். குப்பைக்கழிவுகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள கால்வாயில் விழுந்து விடுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஓடாமல் தேங்கி நிற்கிறது. அங்கு நர்கூர் ஆண்டவர் தர்கா உள்ளது. தேங்கி கிடக்கும் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் தர்காவுக்கு வருவோருக்கு சிரமமாக உள்ளது. எனவே குப்பை தொட்டியை அகற்ற வேண்டும்.
  -மொஹைதீன்பீரான், வாணியம்பாடி.

வேகத்தடை அமைக்க வேண்டும்

  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் இருந்து தளவாநாயக்கன்பேட்டை வழியாக ஆற்றுக்கு செல்லும் தார் சாலையில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வேகமாக செல்கிறது. அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. தார் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
  -புனிதன், செங்கம்.

 உடைந்த குழாய்கள் சரி செய்யப்படுமா?

  பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது வேலூருக்கு தண்ணீர் கொண்டுவர அமைக்கப்பட்ட ஒகேனக்கல் குடிநீர் குழாய்கள் பல இடங்களில் சேதம் அடைந்தன. இதனால் வேலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் குடி தண்ணீர் வினியோகம் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே பாலாற்றில் உடைந்த குழாய்களை சீரமைத்து விரைவாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -மோகன்ராஜ், வேலூர்.

Next Story