புதிய சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும்


புதிய சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும்
x
தினத்தந்தி 25 Jan 2022 10:33 AM GMT (Updated: 25 Jan 2022 10:33 AM GMT)

கூத்தாநல்லூர் அருகே கிளியனூரில் புதிய சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும்என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே கிளியனூரில் புதிய சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும்என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
குறுகிய பாலம்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் பகுதியில் கிளியனூர் கிராமம் உள்ளது. கிளியனூர் கிராமத்துக்கும் புனவாசல் கிராமத்துக்கும் இடையே வெண்ணாற்றின் குறுக்கே 80 ஆண்டுகளுக்கு முன்பு குறுகலான சிமெண்டு பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.  இந்த குறுகிய பாலத்தை கிளியனூர் பெருமாள் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, மேலத்தெரு, தாமரைக்குளம் தெரு, வடக்குதெரு, தெற்குதெரு, வடபாதிமங்கலம், புனவாசல், அன்னுக்குடி, குலமாணிக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும், இந்த பாலத்தில் பள்ளி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வந்தன. 
பழுதடைந்தது
இந்த நிலையில் இந்த குறுகிய பாலம் பழுதடைந்தது. பாலத்தின் தடுப்பு தூண்கள் இடிந்து விழுந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவுக்கு விரிசல்கள் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்டது. பழுதடைந்த பாலத்தில் இருந்து பலர் ஆற்றில் விழுந்து காயமடைந்தனர். இதனால் பழுதடைந்த பாலத்தில் தடுப்பு கம்பிகளுக்கு பதிலாக மூங்கில் மரங்கள் தடுப்பாக கட்டப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதனால், பழுதடைந்த பாலத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக மிகவும் அகலமான சிமெண்டு பாலம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 
கட்டுமான பணியில் தொய்வு
இது குறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு புதிய சிமெண்ட் பாலம் கட்டி தர நடவடிக்கை மேற்கொண்டு பழுதடைந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய அகலமான சிமெண்ட் பாலம் கட்டும் பணிகளை தொடங்கினர். இந்தநிலையில், கடந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் கட்டுமான பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்தநிலையில் அப்பகுதி மக்கள் சென்று வருவதற்கு தற்காலிகமாக மூங்கில் மரங்கள் கொண்டு நடைபாலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. 
புதிய சிமெண்டு பாலம்
இந்த மூங்கில் பாலத்தை  கடந்த ஒரு ஆண்டாக மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள. தற்போது   மூங்கில் பாலத்தில் சென்று வருவதில் மிகவும் சிரமம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். எனவே, இன்னும் சில மாதங்களில் மேட்டூர் அணை மூடப்பட்டவுடன், பாதியிலேயே நிறுத்தப்பட்ட புதிய சிமெண்டு பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று கிளியனூர், புனவாசல், வடபாதிமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

---


Next Story