சிக்கன் சாப்பிட்ட வாலிபர் திடீர் சாவு


சிக்கன் சாப்பிட்ட வாலிபர் திடீர் சாவு
x
தினத்தந்தி 25 Jan 2022 12:14 PM GMT (Updated: 25 Jan 2022 12:14 PM GMT)

சிக்கன் சாப்பிட்ட வாலிபர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 22). இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து பெரவள்ளூரில் உள்ள பிரபல ஓட்டலில் இருந்து சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்டார். பின்னர் வீட்டுக்கு வந்தவர், வெந்நீர் குடித்தார். சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதுடன், நெஞ்சு வலிப்பதாகவும் கூறினார்.

உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ரஞ்சித் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓட்டலில் வாங்கி சாப்பிட்ட சிக்கனால் அவர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இறந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும், எனினும் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story