வார்தாவில் கார் பள்ளத்தில் பாய்ந்துய் விபத்து; எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் பலி


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 25 Jan 2022 1:10 PM GMT (Updated: 25 Jan 2022 1:10 PM GMT)

மராட்டியத்தில் கார் ஆற்று பாலத்தில் இருந்து பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் பலியானார்கள். பிறந்த நாள் கொண்டாடி விட்டு திரும்பியபோது இந்த சோகம் நேர்ந்துள்ளது.

வார்தா, 
மராட்டியத்தில் கார் ஆற்று பாலத்தில் இருந்து பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் பலியானார்கள். பிறந்த நாள் கொண்டாடி விட்டு திரும்பியபோது இந்த சோகம் நேர்ந்துள்ளது. 

 ஆற்று பாலத்தில் இருந்து பாய்ந்தது

மராட்டிய மாநிலம் வார்தா, சிவாங்கியில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் 7 பேர், அருகே உள்ள யவத்மால் மாவட்டத்தில் மாணவர் ஒருவரின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அவர்கள் ஒரு காரில் வார்தா திரும்பி கொண்டு இருந்தனர். காரை மாணவர்களில் ஒருவரே ஓட்டினார். 
 நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் வார்தா மாவட்டம் தியோலி அருகே செல்சுரா கிராம பகுதியில் உள்ள யசோதா ஆற்றுபாலத்தில் கார் வந்து கொண்டு இருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் பாலத்தின் சுவரை இடித்து தள்ளிவிட்டு சுமார் 40 அடி பள்ளத்தில் பாய்ந்தது. 

 7 பேரும் பலி
கார் விழுந்த இடத்தில் தண்ணீர் இல்லை. மின்னல் வேகத்தில் கார் பாய்ந்ததால், அது முட்டைக்கூடு போல நொறுங்கியது. இதனால் காரில் இருந்தவர்கள் மரண ஓலம் எழுப்பினர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் நொறுங்கிய காருக்குள் 7 பேரும் உயிரிழந்து கிடந்தனர். காரின் இடிபாடுகளில் சிக்கி கிடந்த அவர்களின் உடல்களை போராடி மீட்டனர். பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
விபத்தில் சிக்கி பலியான மாணவர்களில் ஒருவர் கோண்டியா மாவட்டம் திரோரா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. விஜய் ரஹங்டலேவின் மகன் அவிஸ்கர் என்பது தெரியவந்தது. 

 வடமாநில மாணவர்கள்
மற்றவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நீரஜ் சவுகான், பிரதயுஷ் சிங், சுபம் ஜெய்வால், பீகார் மாநிலம் கயாவை சேர்ந்த விவேக் நந்தன், பவான் சாக்தி, ஒடிசாவை சேர்ந்த நிதேஷ் குமார் சிங் என்பதும் தெரியவந்தது. 
பலியானவர்களில் ஒருவர் எம்.பி.பி.எஸ். முடித்து இருந்ததும், மற்ற 6 பேரில் தலா 2 பேர் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் என்பதும் தெரியவந்தது.  
மாணவர்கள் உயிரிழந்த தகவல் அறிந்த எம்.எல்.ஏ. குடும்பத்தினரும், வட மாநிலங்களில் வசிக்கும் பெற்றோர்களும் அதிர்ச்சியுடன் வார்தா வந்தனர். ஆஸ்பத்திரியில் தங்களது மகன்களின் உடல்களை கண்டு கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. 
இந்த கோர விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மோடி இரங்கல் 
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
 அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “மராட்டியத்தில் நடந்த சாலை விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். 
 -----------------------


Next Story