கஞ்சா கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது


கஞ்சா கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2022 2:59 PM GMT (Updated: 25 Jan 2022 2:59 PM GMT)

கஞ்சா கடத்திய பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர். ஆட்டோ, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி:

கஞ்சா கடத்தல்

தேனி-போடி சாலையில், மாரியம்மன்கோவில்பட்டி பிரிவு பகுதியில் பழனிசெட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு ஆட்டோவை நிறுத்தி விட்டு அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினர்.
 
அதில், பெண் ஒருவரை போலீசார் பிடித்தனர். மற்ற 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஆட்டோவில் சோதனை செய்த போது, அதில் 2 கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது. அதை விற்பனைக்காக கடத்திச் சென்றது தெரியவந்தது. 

விசாரணையில் போலீசாரிடம் சிக்கியது கோடாங்கிபட்டியை சேர்ந்த முருகன் மனைவி ஜானகி (வயது 43) என்பதும், தப்பி ஓடியது, ஆட்டோ உரிமையாளரான கோடாங்கிபட்டியை சேர்ந்த ராஜாபாண்டி, அவருடைய மனைவி சினேகா, அதே ஊரை சேர்ந்த இளையராஜா மனைவி சூர்யா என்பது தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானகியை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர். கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

தப்பி ஓட்டம்

இதேபோல் தேனி புறவழிச்சாலையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் வாகன தணிக்கை செய்த போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். 

அதில் ஒருவரை போலீசார் துரத்திப் பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவர், அரண்மனைப்புதூரை சேர்ந்த ஆனந்தன் (34) என்பது தெரியவந்தது. அந்த மோட்டார் சைக்கிளில் 500 கிராம் கஞ்சா இருந்தது. 

இதையடுத்து கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தனர். தப்பி ஓடியவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில் போலீசார், கீழக்கூடலூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்ததாக கூடலூர் சுக்காங்கல்பட்டியை சேர்ந்த முத்தையா (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story