விராலிமலை அருகே கஞ்சா விற்பனை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் கைது


விராலிமலை அருகே கஞ்சா விற்பனை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2022 6:42 PM GMT (Updated: 25 Jan 2022 6:42 PM GMT)

விராலிமலை அருகே கஞ்சா விற்பனை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விராலிமலை:
கஞ்சா விற்பனை 
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக தொடர்ந்து விராலிமலை போலீசாருக்கு புகார் வந்தவண்ணம் இருந்தது. இதனால் போலீசார் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விராலிமலை, வடுகப்பட்டி பகுதிகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராணி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது வடுகப்பட்டி சுடுகாடு அருகே விராலிமலையை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அருண்குமார் என்பவர் கையில் கஞ்சாவை வைத்து புகை பிடித்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் வடுகப்பட்டி ஊராட்சி சமத்துவபுரம் அருகே வேலூர் செல்லும் சாலையில் கஞ்சா விற்கப்படுவதாக அவர் கூறினார். 
4 பேர் கைது 
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அங்கு திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரை சேர்ந்த கலியன் மனைவி விஜயா (வயது 66), இவரது மகள் ஜெயலட்சுமி (46) மற்றும் பேரன் யோகராஜ் (25) ஆகியோர் வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் விஜயா, ஜெயலட்சுமி, யோகராஜ், அருண்குமார் (25) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 500 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story