நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும்-முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும்-முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 25 Jan 2022 6:53 PM GMT (Updated: 25 Jan 2022 6:53 PM GMT)

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல்:
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.
தியாகிகளுக்கு வீரவணக்கம்
நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் நேற்று மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாமக்கல்லில் நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், கட்சியின் மாவட்ட செயலாளருமான தங்கமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மாவட்ட மாணவர் அணி செயலாளரும், காளிபாளையம் ஊராட்சி தலைவருமான பொன்னுசாமி வரவேற்றார். பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், பொன்.சரஸ்வதி, கலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரையில் 2016-ம் ஆண்டு மே மாதம் 23-ந் தேதி ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவியேற்றபோது, 500 டாஸ்மாக் கடைகளை மூடினார்.
மதுக்கடைகள் அதிகரிப்பு
அதேபோல் எடப்பாடி பழனிசாமியும், முதல்-அமைச்சராக பதவியேற்ற போது, 500 டாஸ்மாக் கடைகளை குறைத்தார். இவர்கள் (தி.மு.க.) படிப்படியாக குறைப்போம் என்று சொன்னார்கள். இப்போது படிப்படியாக டாஸ்மாக் கடைகளையும், பார்களையும் அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.
உதாரணமாக பள்ளிபாளையம் நகராட்சியில் 10 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகள் இல்லாமல் இருந்தது. இப்போது, 2 கடைகளை கொண்டு வந்திருக்கிறார்கள். தி.மு.க.வை சேர்ந்தவர்களே கடைகள் வரக்கூடாது என்று போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள். 
பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலெக்டரை அணுகி, இதுபோன்ற கடைகளை அதிகப்படுத்தக்கூடாது என கேட்டனர். ஆனால் கலெக்டரும் சரி, மற்றவர்களும் சரி, ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து, இப்போது மதுக்கடைகள் அதிகமாகி கொண்டிருக்கிறது. தி.மு.க.வில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும் உள்ளது.
அ.தி.மு.க. அமோக வெற்றி
வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். அதற்கு பயந்து கொண்டு தான், இப்போது தி.மு.க.வை சேர்ந்தவர்களே சுப்ரீம் கோர்ட்டை நாடியிருக்கின்றார்கள். யார் அ.தி.மு.க. ஆட்சியில், தேர்தல் நடத்த வேண்டும் என்று, வழக்கு தொடுத்தார்களோ? அவரே இப்போது வந்து 4 மாதம் தள்ளிப்போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். மக்களை கண்டு அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. 8 மாத காலத்திலேயே இந்த ஆட்சி மீது வெறுப்பு வந்ததற்கு இது ஒரு உதாரணம்.
இவ்வாறு தங்கமணி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் சேவல் ராஜூ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாரதா, பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முரளி, பள்ளிபாளையம் நகர செயலாளர் வெள்ளியங்கிரி, ஒன்றிய செயலாளர்கள் சேகர், கோபிநாத், ராஜா என்கிற செல்வகுமார், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நமேஷ் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story