பெண் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்


பெண் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Jan 2022 7:20 PM GMT (Updated: 25 Jan 2022 7:20 PM GMT)

பெண் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்:

தகராறு
அரியலூர் மாவட்டம் நாகல்குழி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் ராஜ்குமாா்(வயது 32). கூலித் தொழிலாளியான இவா் திருப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்த தேவிக்கும்(23) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. ேதவி ெசவிலியா் பட்டய படிப்பு படித்துள்ளாா்.
கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் ராஜ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த தேவி, சாண பவுடரைக் (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார், தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தேவியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரது உறவினர்கள் சம்மதிக்காமல், தேவியின் தற்கொலைக்கு அவரது கணவர் ராஜ்குமார் மற்றும் மாமியார் ஆகியோர்தான் காரணம் என்று கூறி, அவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையில் துணை சூப்பிரண்டு(பயிற்சி)சங்கர்கணேஷ், இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், ரவி சக்கரவர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், சுபா உள்ளிட்ட போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் பிரேத பரிசோதனை முடிவு வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ராஜ்குமாரிடம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினர். இதையடுத்து தேவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேவிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத், பிரேத பரிசோதனை கூடத்திற்கு நேரில் சென்று தேவியின் உடலை பார்வையிட்டு, விசாரணை நடத்தினார். இதையடுத்து தேவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தேவியின் உடலை அடக்கம் செய்ய கீழமாளிகை கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.

Next Story