டிரைவருக்கு ஆதரவாக வந்த 2 பேரை காரில் கடத்திய கும்பல்


டிரைவருக்கு ஆதரவாக வந்த 2 பேரை காரில் கடத்திய கும்பல்
x
தினத்தந்தி 25 Jan 2022 7:59 PM GMT (Updated: 25 Jan 2022 7:59 PM GMT)

தஞ்சையில் வரதட்சணையாக பணம் கேட்ட தகராறில் டிரைவருக்கு ஆதரவாக வந்த 2 பேரை கடத்திச் சென்ற மருமகன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்:-

தஞ்சையில் வரதட்சணையாக பணம் கேட்ட தகராறில் டிரைவருக்கு ஆதரவாக வந்த 2 பேரை கடத்திச் சென்ற மருமகன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

டிரைவர்

தஞ்சாவூர் நாணயக்காரச் செட்டித் தெருவைச் சேர்ந்தவர் வரககுமார் (வயது59). கார் டிரைவர். இவருடைய மகள் ரத்தினபாரதி. இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தபோது, மதுரை செக்கானூரணியைச் சேர்ந்த சின்ன பாண்டி மகன் சுந்தரபாண்டியன் (29) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு 2 மாத கைக்குழந்தை உள்ளது.
இந்த நிலையில், வரககுமாரிடம் சுந்தரபாண்டியன் ஏற்கெனவே வரதட்சணையாக ரூ.4 லட்சம் வாங்கினாராம். இந்த நிலையில், மேலும் ரூ.16 லட்சம் கேட்டு சுந்தரபாண்டியன் வற்புறுத்தி வந்தாராம்.

காரில் கடத்தல்

இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சுந்தரபாண்டியனை தஞ்சைக்கு வருமாறு வரககுமார் கூறினார். இதன்படி, தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே வந்த சுந்தரபாண்டியன் தரப்பினருக்கும், வரககுமார் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, வரககுமாருக்கு ஆதரவாக வந்த நாணயக்காரச் செட்டித் தெருவைச் சேர்ந்த கோபிநாதன் (45), ஓம்பிரகாஷ் (35) ஆகியோர் மணிமண்டபம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இவர்களைப் பின் தொடர்ந்து காரில் வந்த சுந்தரபாண்டியன் தரப்பினர், இருவரையும் தாக்கி கடத்திச் சென்றனர்.

6 பேர் கைது

இதுகுறித்து தெற்கு போலீசில் வரககுமார் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காரை விரட்டிச் சென்று புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மடக்கிப் பிடித்தனர். பின்னர், கோபிநாதனையும், ஓம் பிரகாசையும் மீட்ட போலீசார் அவர்களை கடத்திச் சென்றதாகச் சுந்தரபாண்டியன், மதுரை செக்கானூரணியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (21), அஜீத்குமார் (26), விஸ்வா (20), அருண்குமார் (21), நேதாஜி (29) ஆகியோரை கைது செய்தனர்.

Next Story