மந்திரிகளுக்கு சொந்த மாவட்டங்களின் பொறுப்பு வழங்காதது ஏன்? - பசவராஜ் பொம்மை பதில்

மந்திரிகளுக்கு சொந்த மாவட்டங்களின் பொறுப்பு வழங்காதது ஏன் என்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு:
வெறும் வதந்திகள்
கர்நாடகத்தில் மாவட்ட பொறுப்பு மந்திரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதனால் மந்திரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மந்திரிகளுக்கு சொந்த மாவட்டங்களில் பொறுப்பு மந்திரி வழங்காதது ஏன் என்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மந்திரிகளுக்கு சொந்த மாவட்டத்தை தவிர வேறு மாவட்டங்களின் பொறுப்பை வழங்க வேண்டும் என்பது எங்கள் கட்சி மேலிடத்தின் முடிவு. அந்த முடிவை நான் அமல்படுத்தியுள்ளேன். இதுகுறித்து ஆழமாக ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் மந்திரிகள் யாருக்கும் அதிருப்தி இல்லை. யாரும் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை. அதிருப்தி இருப்பதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை. அவை வெறும் வதந்திகளே. நான் அனைத்து மந்திரிகளிடமும் பேசினேன். மந்திரிகளுக்கு பிற மாவட்டங்களின் பொறுப்பை வழங்க வேண்டும் என்பது எங்கள் கட்சி மேலிடத்தின் கொள்கை முடிவு. நான் உள்பட மந்திரிகள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுவோம். மக்களின் நலனுக்காக நாங்கள் பாடுபடுவோம். மந்திரிகள் அதிருப்தியில் உள்ளதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது.
சட்டவிரோதமாக சலுகைகள்
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகளுக்கு சட்டவிரோதமாக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து சிறைத்துறை உயர் அதிகாரிடம் இருந்து அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜனதாவை சேர்ந்த நிர்வாகிகள் காங்கிரசில் சேர உள்ளதாக அக்கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். எங்கள் கட்சியை சேர்ந்த யாரும் காங்கிரசுக்கு செல்ல மாட்டார்கள். காங்கிரசார் தான் எங்கள் கட்சிக்கு வந்துள்ளனர். அரசியல் ரீதியாக தற்போது நடைபெற்று வரும் சில விஷயங்கள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் வரும் நாட்களில் எங்கள் கட்சி மேலும் பலமடையும்.
காங்கிரஸ் தலைவர்கள் டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் தங்கள் கட்சியில் பாதுகாப்பு இல்லை என்று கருதுகிறார்கள். அவர்கள் 2 பேருக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. கட்சியில் யார் பெரியவர் என்பதில் இருவருக்கும் இடையே போட்டி எழுந்துள்ளது. அதனால் மாதந்தோறும் ஏதாவது ஒரு விஷயத்தை அவர்கள் கையில் எடுத்து கொள்கிறார்கள். அந்த வகையில் தற்போது பா.ஜனதாவினர் காங்கிரசில் சேர தயாராக இருப்பதாக பொய்யான தகவலை கூறுகிறார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
ஒதுங்கி இருக்கிறேன்
இதுகுறித்து மந்திரி மாதுசாமி கூறுகையில், ‘‘மந்திரிகளுக்கு சொந்த மாவட்டங்கள் பொறுப்பாக ஒதுக்கப்படாது என்று கட்சி முடிவு எடுத்திருந்தால் அதிருப்தி என்ற பேச்சுக்கு இடமில்லை. நான் மாவட்ட பொறுப்பு மந்திரி பதவியில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன். ஏனென்றால் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. அதனால் தான் நான் பிற மாவட்டங்களின் பொறுப்பில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன்’’ என்றார்.
பொறுப்பு மாவட்டம் மாற்றப்பட்டதால் அதிருப்தியில் உள்ள மந்திரி எம்.டி.பி.நாகராஜ், பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘எனக்கு பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒதுக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இது கட்சி மேலிடத்தின் முடிவு என்பதால், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்’’ என்றார்.
Related Tags :
Next Story