மளிகை குடோனில் ரூ.5 லட்சம் திருடியது ஏன்?


மளிகை குடோனில் ரூ.5 லட்சம் திருடியது ஏன்?
x
தினத்தந்தி 25 Jan 2022 8:35 PM GMT (Updated: 25 Jan 2022 8:35 PM GMT)

மளிகை குடோனில் ரூ.5 லட்சத்தை திருடியது ஏன்? என்பது குறித்து கைதான மேலாளர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அன்னதானப்பட்டி:-
மளிகை குடோனில் ரூ.5 லட்சத்தை திருடியது ஏன்? என்பது குறித்து கைதான மேலாளர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ரூ.5 லட்சம் திருட்டு
சேலம் நெத்திமேடு புத்தூர் இட்டேரி ரோடு பகுதியில் தனியார் நிறுவனத்தின் மளிகை பொருட்கள் மொத்த குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இருந்த ரூ.5 லட்சம் திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குடோனின் பூட்டை உடைத்தோ, மேற்கூரை உடைத்தோ திருட்டு நடைபெற வில்லை. இதனால் போலீசார் அந்த குடோனில் பணியாற்றும் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். 
அதிலும் குறிப்பாக சூரமங்கலம் தர்ம நகர் பகுதியில் வசித்து வரும் மேலாளர் தனசேகரன் (வயது 32) என்பவரிடம் தான் குடோன் சாவி இருந்துள்ளது. எனவே அவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரித்தனர். இதில் தனசேகரன் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். 
பரபரப்பு வாக்குமூலம்
மேலும் அந்த பணத்தை ஓமலூரில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் தனசேகரன் தெரிவித்தார். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகரனை கைது செய்தனர். அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
தனசேகரனின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் அழகர் கோவில் ஆகும். இவருக்கு திருமணமாகி ரேணுகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் வந்து 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மாலில் வேலை செய்து வந்தார். அதன்பின்னர் நெத்திமேடு மளிகை குடோனில் வேலைக்கு சேர்ந்து பணிபுரிந்து வந்தார். 
பண ஆசை
இந்த நிலையில் அவர் போதிய வருமானமின்றி குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்துள்ளார். மேலும் நண்பர்கள், உறவினர்கள் போல பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மளிகை குடோனில் தினமும் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பார்த்து அவருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. குடோன் மேலாளர் என்பதால், ஊழியர்கள் அனைவரும் தனது கட்டுப்பாட்டில் உள்ளதால், எளிதாக பணத்தை திருடி விடலாம் என திட்டம் போட்டுள்ளார்.
இதன்படி கடந்த 22-ந் தேதி பணத்தை திருட முடிவு செய்தார். அன்று இரவு ஊழியர்கள் அனைவரும் வேலை முடிந்து சென்றனர். அப்போது தொடர்ந்து கடைசியாக தனசேகரன் குடோனை பூட்டிவிட்டு சென்றார். அவர் புறப்படும் முன்பாகவே குடோனில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு சென்றுள்ளார். மீண்டும் அன்று இரவு வந்து தான் வைத்திருந்த சாவியை கொண்டு குடோனை திறந்து நிறுவனத்தின் அன்றைய மொத்த வசூல் தொைக ரூ.5 லட்சத்தை திருடி சென்றுள்ளார். பணத்தின் மீது ஆசை கொண்டு திருடியதாக தெரிவித்துள்ளார். மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு போலீசார் கூறினர்.

Next Story