புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 Jan 2022 9:31 PM GMT (Updated: 25 Jan 2022 9:31 PM GMT)

புகார் பெட்டி

பஸ்வசதி வேண்டும்

ஈரோட்டில் இருந்து ஊஞ்சலூர், கொடுமுடி, நொய்யல் வழியாக பரமத்தி வேலூருக்கு அரசு பஸ் வசதி இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு பஸ் இயக்கப்பட்டது. பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டது. நாள்தோறும் பரமத்தி வேலூர் பகுதியில் ஏராளமானோர் கொடுமுடி வந்து அங்கிருந்து வேறு ஒரு பஸ் மாறி ஈரோடு வந்து செல்கிறார்கள். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈரோட்டில் இருந்து பரமத்தி வேலூருக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

   விக்னகணபதி, கொடுமுடி.
  
நடுரோட்டில் ஆபத்தான குழி

  ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பஸ்நிலையத்துக்கு வாசுகி வீதி, அகில்மேடு 7-வது வீதி வழியாகத்தான் பஸ்கள் வருகின்றன. இதில் அகில்மேடு 7-வது வீதியில் டாஸ்மாக் கடை அருகே 4 ரோடுகள் பிரியும் இடத்தில் ஒரு பெரிய ஆபத்தான குழி உள்ளது. இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இந்த குழியில் சிக்கி கீழே விழுந்து விடுகிறார்கள். பரபரப்பான 4 ரோடு சந்திப்பில் ஆபத்தான குழி இருப்பது, பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்தி விடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இந்த குழியை சரிசெய்வதற்கு ஆவன செய்வார்களா?
   பொதுமக்கள், ஈரோடு.
  
கூடுதல் கடைகள் வேண்டும்

  ஜம்பை பேரூராட்சிக்கு உள்பட்ட தளவாய்ப்பேட்டை பகுதியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று மாலை வாரச்சந்தை நடைபெறும். தளவாய்ப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், இந்த சந்தைக்கு வந்து காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி செல்வார்கள். இதனிடையே கொரோனா தொற்று காரணமாக இந்த சந்தை 3 மாதங்களாக நடைபெறவில்லை. தற்போது கடந்த 5 வாரங்களாக சந்தை செயல்படுகிறது. எனினும் சந்தையில் கடைகள் அதிக அளவில் வைக்கப்படவில்லை. இதனால் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை குறைந்த விலைக்கு வாங்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே வாரச்சந்தையில் கூடுதல் கடைகளை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், ஜம்பை.
  
வீணாகும் குடிநீர்

  ஈரோடு மூலப்பட்டறை காந்திபுரம் 2-வது வீதியில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இந்த குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி செல்கிறது. எனவே குழாயில் ஏற்பட்டு உள்ள உடைப்பை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், மூலப்பட்டறை.
  
மயானம் பராமரிக்கப்படுமா?

  நம்பியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட மயானம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர்கள் நிறைந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. இதன் காரணமாக மயானத்துக்கு செல்ல அச்சமாக உள்ளது. பெரிதும் சிரமப்படுகிறோம். உடனே மயானத்தை சுத்தம் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  பொதுமக்கள், நம்பியூர்

நாய்கள் தொல்லை

  பவானி சோமசுந்தரபுரம் வீதியில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. சாலையில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் நாய்கள் துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் குழந்தைகள் தெருவில் விளையாடவே அச்சப்படுகிறார்கள். எனவே நகராட்சி அதிகாரிகள் சோமசுந்தரம் வீதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
  தங்கராசு, சோமசுந்தபுரம், பவானி.

ஜல்லிகள் தெரியும் ரோடு

  ஈரோடு வெண்டிபாளையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரெயில்வே நுழைவு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் கீழ் உள்ள ரோடு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு ஜல்லிகள் வெளியே தெரிய பெயர்ந்து காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலத்தின் கீழ் உள்ள ரோட்டை உடனே சீரமைக்க வேண்டும்.
  கண்ணபிரான், ஈரோடு.
 
  


Next Story