ஒரு மீன் ரூ.2 லட்சத்துக்கு ஏலம் போனது


ஒரு மீன் ரூ.2 லட்சத்துக்கு ஏலம் போனது
x
தினத்தந்தி 26 Jan 2022 2:28 PM GMT (Updated: 26 Jan 2022 2:28 PM GMT)

நாகையில், மீனவர்கள் வலையில் மருத்துவ குணம் வாய்ந்த அரியவகை கத்தாழை மீன்கள் சிக்கின. ஒரு மீன் ரூ.2 லட்சத்துக்கு ஏலம் போனது.

நாகப்பட்டினம்:-

நாகையில், மீனவர்கள் வலையில் மருத்துவ குணம் வாய்ந்த அரியவகை கத்தாழை மீன்கள் சிக்கின. ஒரு மீன் ரூ.2 லட்சத்துக்கு ஏலம் போனது.

கத்தாழை மீன்

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். நேற்று மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய ஒரு சில விசைப்படகுகளில் மீனவர்களின் வலையில் மருத்துவ குணம் வாய்ந்ததும், தங்கத்தை போன்று விலை மதிக்க கூடியதுமான கூறல் மீன் எனப்படும் அரியவகை கத்தாழை மீன்கள் சிக்கின.
இதுகுறித்து தகவல் அறிந்த வியாபாரிகள் கத்தாழை மீன்களை வாங்க நாகை மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர். அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். இதில் ஒரு மீன் ரூ.2 லட்சத்துக்கு ஏலம் போனது. 
இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-

அரிதாக சிக்கும் 

கோடியக்கரைக்கு தென்கிழக்கே கத்தாழை மீன்கள் கிடைக்கும். வலையில் மிகவும் அரிதாக இந்த மீன்கள் சிக்கும். இந்த வகை மீன்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். கத்தாழை மீன்களின் அடி வயிற்றில் நெட்டி என்ற காற்றுப்பை இருக்கும். 
ஒரு மீனில் 50 கிராம் முதல் 100 கிராம் வரை இந்த நெட்டி இருக்கும். இந்த மீன்கள், நெட்டி மூலம் ஆபத்து காலத்தில் ஒரு வகை ஒலியை எழுப்பும்.

பேரதிர்ஷ்டம்

இந்த நெட்டி ஒயின் மற்றும் மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆண்மை குறைவுக்கும் இந்த நெட்டி மூலம் மருந்து தயாரிக்கப்படுகிறது.
கத்தாழை மீனின் இறைச்சி குறைந்த விலைக்கு விற்றாலும், அதில் இருக்கும் நெட்டிக்குத்தான் விலை அதிகம். எனவே இந்த வகையான மீன்கள் சிக்குவது பேரதிர்ஷ்டம்.
இந்த நிலையில் நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய ஒரு விசைப்படகில் 33 மீன்களும், மற்றொரு விசைப்படகில் 6 மீன்களும், இன்னும் 2 விசைப்படகுகளில் தலா 1 மீனும் என மொத்தம் 41 கத்தாழை மீன்கள் சிக்கி உள்ளன. இந்த மீன்கள் 18 கிலோவில் இருந்து 27 கிலோ வரை இருந்தன. 

ரூ.70 லட்சத்துக்கு ஏலம்

சராசரியாக ஒரு மீன் ரூ.2 லட்சம் வரை ஏலம் போனது. மொத்தமாக 41 கத்தாழை மீன்கள் ரூ.70 லட்சத்துக்கு ஏலம் போனது. இவ்வாறு மீனவர்கள் கூறினர். 
நீண்ட நாட்களுக்குப்பிறகு மொத்தமாக கத்தாழை மீன்கள் கிடைத்திருப்பதால் நாகை மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Next Story