தேனியில் மத்திய அரசை கண்டித்து தேசிய கொடியுடன் ஆர்ப்பாட்டம்


தேனியில் மத்திய அரசை கண்டித்து தேசிய கொடியுடன் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2022 3:34 PM GMT (Updated: 26 Jan 2022 3:34 PM GMT)

தேனியில் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது.

தேனி:
டெல்லியில் குடியரசு தினவிழா அலங்கார அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும், தொழிலாளர் சட்ட திருத்தங்களை கைவிடக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் தேனி பழைய பஸ் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று தேசிய கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். 
ஆர்ப்பாட்டத்தின் போது தொழிற்சங்கத்தினர் அனைவரும், மத்திய அரசை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கக்கோரியும் தேசியகொடியுடன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர், மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.க., ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.யு.டி.யு.சி., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மத்திய அரசை கண்டித்து அரண்மனைப்புதூரில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை இருசக்கர வாகனங்களில் தேசியகொடி ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தின் போது, அரண்மனைப்புதூரில் அம்பேத்கர் சிலை, கருவேல்நாயக்கன்பட்டியில் முத்துராமலிங்கத்தேவர் சிலை, தேனியில் நேரு சிலை ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
பின்னர் பழைய பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேனி தாலுகா செயலாளர் தர்மர் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயலாளர் அண்ணாமலை, மாநிலக்குழு உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Next Story