சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுமான பணி: பொதுமக்கள் திடீர் சாலை மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசம்


சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுமான பணி: பொதுமக்கள் திடீர் சாலை மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசம்
x
தினத்தந்தி 26 Jan 2022 6:36 PM GMT (Updated: 26 Jan 2022 6:36 PM GMT)

புதுக்கோட்டையில் சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுமான பணி நடைபெறுவதை கண்டித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசமடைந்தனர்.

புதுக்கோட்டை:
வீட்டு வசதி வாரிய கட்டுமான பணி
புதுக்கோட்டை கம்பன் நகரில் வீட்டுவசதி வாரியம் சார்பில் தரை தளம் மற்றும் 5 தளங்களுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்தின் அருகே மழைநீர் வடிகால் சாக்கடை கால்வாய் உள்ளது. மழைகாலங்களில் இந்த கால்வாயில் தண்ணீர்
பெருக்கெடுத்து ஓடும். 
இந்த நிலையில் தற்போது வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுமான பணிக்காக கால்வாயின் அகலத்தை சுருக்கி அதில் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்படுவதாக பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர் பெரியார்நகர் சிவா தலைமையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் குறுக்கே கற்களையும், மரக்கட்டைகளையும் அடுக்கி வைத்தனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது.
போலீசார் பேச்சுவார்த்தை
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சாக்கடை கால்வாய் அகலம் குறைக்கப்பட்டால் மழை காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து சாலையில் ஆறுபோல ஓடி வீடுகளுக்குள்ளும், தாழ்வான பகுதிகளுக்குள்ளும் புகுந்துவிடும். இதனால் பொது மக்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும். எனவே சாக்கடை கால்வாயை முன்பு இருந்தப்படியே அதன் அகலத்தின் அளவு படியே இருக்க வேண்டும். நகராட்சி அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரினர். மேலும் நகராட்சி அதிகாரிகளிடமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன்பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story