நாமக்கல் மாவட்டத்தில் 447 நகராட்சி, பேரூராட்சி, வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது


நாமக்கல் மாவட்டத்தில் 447 நகராட்சி, பேரூராட்சி, வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது
x
தினத்தந்தி 26 Jan 2022 6:54 PM GMT (Updated: 26 Jan 2022 6:54 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சி மற்றும் 19 பேரூராட்சிகளில் 447 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சி மற்றும் 19 பேரூராட்சிகளில் 447 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் என 5 நகராட்சிகளுக்கும் ஆலாம்பாளையம், அத்தனூர், எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மல்லசமுத்திரம், மோகனூர், நாமகிரிப்பேட்டை, படைவீடு, பாண்டமங்கலம், பரமத்தி, பட்டணம், பிள்ளாநல்லூர், பொத்தனூர், ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, சேந்தமங்கலம், பரமத்திவேலூர், வெங்கரை மற்றும் வெண்ணந்தூர் என 19 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.
நகராட்சிகளை பொறுத்த வரையில் குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டு உறுப்பினர்கள், நாமக்கல் நகராட்சியில் 39 வார்டு உறுப்பினர்கள், பள்ளிபாளையம் நகராட்சியில் 21 வார்டு உறுப்பினர்கள், ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டு உறுப்பினர்கள், திருச்செங்கோடு நகராட்சியில் 33 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 153 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. பேரூராட்சிகளை பொறுத்த வரையில் சேந்தமங்கலம், பரமத்திவேலூர் மற்றும் நாமகிரிப்பேட்டை பேரூராட்சிகளில் தலா 18 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், இதர 15 பேரூராட்சிகளில் தலா 15 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 294 வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
689 வாக்குச்சாவடிகள்
இதற்காக மாவட்டம் முழுவதும் 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. நகராட்சிகளை பொறுத்த வரையில் தற்போதைய நிலவரப்படி 3 லட்சத்து 23 ஆயிரத்து 762 வாக்காளர்களும், பேரூராட்சி பகுதிகளில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 796 வாக்காளர்களும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 5 லட்சத்து 53 ஆயிரத்து 558 பேர் வாக்களிக்க உள்ளனர். துணை பட்டியல் இணைக்கும் போது வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமாக நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 447 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனுக்களை பிப்ரவரி 4-ந் தேதி வரை தாக்கல் செய்யலாம் எனவும், 5-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும், வேட்புமனுக்களை திரும்ப பெற 7-ந் தேதி கடைசிநாள் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story