‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 26 Jan 2022 7:21 PM GMT (Updated: 26 Jan 2022 7:21 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து மார்க்கண்டன்பட்டி வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி இந்த சாலையை சீரமைக்க வேண்டும். 
சிதம்பரம், தேவகோட்ைட. 

குடிநீர் தொட்டி பராமரிக்கப்படுமா? 

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி பஞ்சாயத்து ஒண்டிவீரன் காலனியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி தற்போது பராமரிக்கப்படாமல் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
பொதுமக்கள், வெற்றிலையூரணி. 

ரேஷன்கடை தேவை 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுமடம் கிராமத்தில் ரேஷன் கடை இல்லை. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் சில கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பொருட்கள் வாங்கி வரவேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, இப்பகுதியில் ரேஷன்கடை அமைக்க வேண்டும். 
கரீம் மதினா, புதுமடம். 

தெருநாய்கள் தொல்லை 

மதுரை மாநகரில் பல இடங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவைகள் தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் தெருவில் செல்ல அச்சம் அடைகின்றனர். பொதுமக்களுக்கு தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 
குமார், மதுரை. 

சாலை சீரமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து எஸ்.காவனூர் வரை செல்லும் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. ஆங்காங்கே சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் செல்லும் போது பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
பொதுமக்கள், பரமக்குடி. 
வீணாகும் குடிநீர்  
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பாரதிதாசன் தெருவில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சாலையில் ஓடுகிறது. இதன்காரணமாக சில பகுதிகளில் மக்களுக்கு குறைந்த அளவிலேயே தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே, உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும்.
சரவணன், காரைக்குடி. 

பயணிகள் அவதி 

ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சாலை ஆங்காங்கே பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். முதியவர்களும், கர்ப்பிணிகளும் பஸ்சில் இந்த சாலையில் பயணிக்கும் போது அவதிப்படுகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும். 
நாகூர், கீழக்கரை. 

Next Story